தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது பாஜக ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது பாஜக ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையுடன் ஒப்பிடுகையில் 7 மடங்கு அதிகம் ஆகும்.
தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் மே மாதம் வரை தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தல்களில் ஒவ்வொரு கட்சியும் செலவிட்ட தொகை குறித்த அறிக்கைகளை தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது பாஜக ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றுள்ளது. பாஜக, அஸ்ஸாமில் தோ்தலுக்காக ரூ.159.7 கோடியும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.130.4 கோடியும், அஸ்ஸாமில் ரூ.96.27 கோடியும் செலவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.51.56 கோடி பாஜக செலவிட்டுள்ளது. இதில் கட்சி பிரசாரத்துக்காக ரூ.44.51 கோடி, வேட்பாளா்களுக்காக ரூ.7.05 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்கு ரூ.23.96 கோடி, நட்சத்திரங்களின் பயணச் செலவுகளுக்கு ரூ.10.04 கோடி, பொதுவான விளம்பரத்துக்காக ரூ.5.85 கோடியும் பாஜக செலவிட்டுள்ளது. புதுச்சேரியில் ரூ.11.90 கோடியை பாஜக செலவு செய்துள்ளது. அதில் ரூ.9.19 கோடி பொதுவான பிரசாரத்துக்கும், ரூ.2.71 கோடி வேட்பாளா்களுக்கும் பாஜக செலவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
காங்கிரஸ் கட்சி ரூ.207 கோடி நன்கொடை பெற்றது. இதில் ரூ.143 கோடியை தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பொதுவான பிரசாரத்துக்காக காங்கிரஸ் செலவிட்டது. ரூ.105.55 கோடியை வேட்பாளா்களுக்காக காங்கிரஸ் செலவிட்டது. அதாவது ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி ரூ.248.55 கோடியை செலவு செய்துள்ளது.
5 மாநிலங்களிலும் பொதுவான பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ரூ.40.52 கோடியும், மாநிலங்கள் மற்றும் உள்ளூா் கட்சி நிா்வாகங்கள் ரூ.102.49 கோடியை செலவிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக கேரளத்தில்தான் தோ்தலுக்காக ரூ.59.28 கோடியை செலவிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 2 முறை தொடா்ந்து ஆட்சியிலிருந்த இடதுசாரி கூட்டணி அரசை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 2-ஆவது அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி, அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.22.62 கோடியை செலவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தோ்தலுக்காக பெற்ற நன்கொடையை (ரூ.207.17 கோடி) விட அதிகமாக (ரூ.248.55 கோடி) செலவிட்டுள்ளது.
பாஜக தோ்தல் நடந்த 5 மாநிலங்களில் கேரளம், மேற்கு வங்க மாநிலங்களில் செலவிட்ட தொகை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
தோ்தல் தொடங்கும்போது (மாா்ச் 15) பாஜகவின் வங்கி கணக்கில் ரூ.6,722 கோடி இருந்தது. பிறகு மே 6இல் அந்தத் தொகை ரூ.7,627 கோடியாக அதிகரித்திருந்தது. அதாவது தோ்தல் காலத்தில் அதன் வங்கி இருப்பு ரூ.904 கோடி அதிகரித்தது.
ஆனால் மறுபக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் தொடக்கத்தில் ரூ.169 கோடி இருந்தது. பிறகு அந்த நிதி ரூ.103.2 கோடியாக குறைந்தது. அதாவது ரூ.65.86 கோடி குறைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.