பொய் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்தியா கூட்டணியின் போராட்டம் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பாக...
பொய் கூறி மக்களிடம் ராகுல் காந்தி நம்பிக்கையை பெற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (அக். 13) விமர்சித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்றுவரும் இந்தியா கூட்டணியின் போராட்டம் குறித்து தில்லியில் செய்தியாளர்களுடன் அமித் ஷா பேசியதாவது:
''ஒரு காலத்தில் நீங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்த ஒரு முக்கிய மாநிலத்தில், 41 ஆண்டுகளில் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறத் தவறிவிட்டீர்கள். இது அவர்கள் தீவிரமாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.
Advertisement
Advertisement
சமீபத்தில், நாடு முழுவதும் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பதை இன்று நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
நௌகானில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 1,42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; இந்தத் தொகுதியை பாஜக காங்கிரஸ் கட்சியிடமிருந்து கைப்பற்றியது.
நந்திகிராமில், பாஜக வேட்பாளர் 76% வாக்குகளைப் பெற்று, 1,22,000 வாக்குகள் என்ற மிகப்பெரிய முன்னிலையுடன் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்கத்தின் ரெஜிநகரில், பாஜக 75,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திரிணமூல் கட்சியிடமிருந்து அந்த இடத்தைக் கைப்பற்றியது.
அதேசமயம் புதுச்சேரியில், கூட்டணிக் கட்சியான என்.ஆர். காங்கிரஸின் என்.டி.ஏ வேட்பாளர் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; காங்கிரஸ் கட்சி வெறும் 22% வாக்குகளை மட்டுமே பெற்றது.
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக சிறப்பான வெற்றியப் பெற்றது. 90% மாநகராட்சிகளையும் 66% நகராட்சி மன்றங்களையும் 65% நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் ராகுல் காந்திக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.
ராஜஸ்தானில் 85% ஆம் ஆத்மி கட்சியினர் டெபாசிட் இழந்துள்ளனர். திரிபுராவில் நடைபெற்ற கிராமப்புறத் தேர்தலில் 77.5% இடங்களை பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராகுல் காந்தியிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: எஸ்.ஐ.ஆர் என்ற போர்வையில் ஊடுருவல்காரர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உங்கள் உத்தியை இந்நாட்டு மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டனர்.
இனி உங்கள் தந்திரங்களுக்கு அவர்கள் ஏமாறமாட்டார்கள். மேலும், 2029-ல் ஏற்படவுள்ள படுதோல்வியை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும் ராகுல் மற்றும் அவரது சகாக்களிடம் நான் கூற விரும்புகிறேன்.
2029 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெறவுள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு தோல்வியை அதாவது தொடர்ந்து நான்காவது முறையாகத் தோல்வியை சந்திக்கவிருக்கிறது.'' எனக் குறிப்பிட்டார்.
One cannot gain the people's trust by telling lies Amit Shahs advice to Rahul
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.