கருத்தாக்காளர்களின் மனவோட்டம்!
வாக்காளர்கள் தங்களது தேர்வை முடிவெடுக்கிறார்களே தவிர, கொள்கை அடிப்படையில் அல்ல என்பதை பிரதிபலிக்கும் மேலவைத் தேர்தல் முடிவுகளைப் பற்றி...
தலைநகர் தில்லியை மையப்படுத்தி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், வாக்காளர் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் எதுவும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவிடவில்லை என்பதைத்தான் அண்மையில் நடந்து முடிந்திருக்கும் சட்ட மேலவைகளுக்கான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்கள்- பட்டதாரிகளுக்கான மேலவைத் தொகுதிகளுக்கு நடந்திருக்கும் தேர்தல் முடிவுகளைப் பேரவை, மக்களவைத் தேர்தல்களின் பிரதிபலிப்புகளாகக் கருத முடியாது என்றாலும், அவற்றைப் புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட சமூகப் பிரிவுகளின் பங்களிப்புகள் அசாதாரணமானவை. மக்கள் மன்றத்தில் பொதுக்கருத்தை உருவாக்குவதிலும், பிரச்னைகள் குறித்த பார்வையை வலுப்படுத்துவதிலும் இந்தப் பிரிவினரின் பங்களிப்பு முக்கியமானது. அதனால்தான் அவர்கள் கருத்தாக்காளர்கள் (ஒப்பீனியன் மேக்கர்ஸ்) என்று அழைக்கப்படுகிறார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் பிரிவினரை உள்ளடக்கியவைதான் மேலவைகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளின் வாக்காளர்கள் என்பதால், அந்தத் தேர்தல் முடிவுகள் பொதுவான மனவோட்டத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகின்றன. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்ட மேலவைகளுக்கான ஆசிரியர்கள்-பட்டதாரிகள் தொகுதித் தேர்தல்கள் முக்கியமான நான்கு மாநிலங்களில் நடந்து முடிந்திருக்கின்றன.
கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், பிகார் ஆகிய நான்கு மாநிலங்களில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாறிவரும் அரசியல் சூழலையும், அடிமட்ட வாக்காளர்களின் உணர்வுகளையும் மேலவைகளுக்கான இடைத்தேர்தல் பிரதிபலிக்கும். அந்தந்த மாநிலக் கள நிலவரத்தையும், பிரதிநிதிகளின் செயல்பாடுகளையும், ஆளும் கட்சியினர் மீதான மக்கள் கருத்தையும் சார்ந்துதான், இதுபோன்ற மேலவைக்கான தேர்தல் முடிவுகள் அமைவது வழக்கம்.
நான்கு மாநிலங்களில் அமைந்த 28 மேலவைத் தொகுதிகளுக்கான தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து மாறுபட்டவை என்பது என்னவோ உண்மை. குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளான ஆசிரியர்கள், பதிவு செய்திருக்கும் பட்டதாரிகள் தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தல்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு; மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மூலம் அல்லாமல், வாக்குச்சீட்டுகளின் அடிப்படையில்தான் தேர்தல் நடந்திருக்கிறது.
வேட்பாளர்கள் முதலாவது, இரண்டாவது என்று வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் கட்சிகளின் பிரசார வலிமை, வாக்காளர்களின் முதன்மைத் தேர்வாக அமைவது உள்ளிட்டவை வெற்றி-தோல்வியில் கணிசமான பங்கு வகிக்கின்றன.
ஆசிரியர்களும், படித்த பட்டதாரிகளும் கூர்ந்த அரசியல் நோக்கர்கள் என்பதால், அவர்கள் பெரும்பாலும் வெகுஜனக் கருத்தைத்தான் தங்கள் வாக்குகள் மூலம் பிரதிபலித்திருக்கிறார்கள் என்று கருதலாம். 28 இடங்களுக்கு நடந்த மேலவைக்கான தேர்தலில், ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தில் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை என்பது மிகப் பெரிய பின்னடைவு.
வாக்குச்சீட்டுகள் மூலம் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை எனும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த காங்கிரஸின் விமர்சனமும் ஐயப்பாடும் அர்த்தமற்றவையாகின்றன. மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் மட்டும்தான் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, போட்டித் தேர்வுகளில் குளறுபடி, எஸ்ஐஆர் உள்ளிட்டவை காங்கிரஸின் பிரசாரத்தில் முன்னுரிமை பெற்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் வலிமையாகப் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், அவை எதுவுமே வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 28 தொகுதிகளில் பாஜக 13 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 3 தொகுதிகளிலும் (மொத்தம் 16 தொகுதிகள்) வெற்றி பெற்றிருக்கின்றன. ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமையிடமான நாகபுரியில் பாஜக வேட்பாளரைக் காங்கிரஸ் தோற்கடித்திருக்கிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதிக்கு உள்ளிட்ட வாரணாசியில் பாஜக வேட்பாளரை, சமாஜவாதி கட்சி வேட்பாளர் தோற்கடித்து மேலவை இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார். இரண்டு தொகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்துத் தீவிரமான ஆய்வில் பாஜக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது என்றால், நாகபுரியிலும், வாரணாசியிலும் பாஜக தோற்கடிக்கப்பட்டிருப்பதையே தனது வெற்றியாகக் கருதி, ஏனைய தொகுதிகளில் ஏற்பட்ட பின்னடைவு குறித்துக் காங்கிரஸ் கவலைப்படாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?
மேலவைத் தேர்தல் முடிவுகள் உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அடுத்து நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் உத்தியைக் கட்டமைக்க வழிகோலும் என்பதை பாஜக தலைமையைப் போலவே காங்கிரஸ் மேலிடமும் உணர்ந்து செயல்படாவிட்டால், மீண்டும் பின்னடைவுதான் காத்திருக்கும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது. கட்சிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் வாக்காளர்கள் தங்களது தேர்வை முடிவெடுக்கிறார்களே தவிர, கொள்கை அடிப்படையில் அல்ல என்பதை இப்போதைய மேலவைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
********
திருக்குறள் (எண் 497) அதிகாரம்: இடன் அறிதல்
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.