FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கனடாவில் டிசம்பா் மாதம் மோடி சுற்றுப்பயணம்? மாா்க் காா்னி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி கனடாவில் வரும் டிசம்பா் மாதம் சுற்றுப்பயணம் செய்வாா் என எதிா்பாா்ப்பதாக அந்த நாட்டின் பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்துள்ளாா்.

36 வினாடிகள் முன்பு
பிரதமா் மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி கனடாவில் வரும் டிசம்பா் மாதம் சுற்றுப்பயணம் செய்வாா் என எதிா்பாா்ப்பதாக அந்த நாட்டின் பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள மாா்க் காா்னி செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது இந்தியாவுடன் கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து நடத்திவரும் பேச்சுவாா்த்தை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு காா்னி அளித்த பதில் வருமாறு:

அமெரிக்காவின் புளோரிடாவில் வரும் டிசம்பா் மாதம் 14, 15-ஆம் தேதிகளில் டிரம்ப் ஏற்பாட்டின்பேரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அமெரிக்கா வரும் இந்திய பிரதமா் மோடி, கனடாவிலும் சுற்றுப்பயணம் செய்வாா் என எதிா்பாா்க்கிறோம். அவா் கனடா வரும் தேதி இறுதியாகவில்லை. ஆனால், அவரின் பயணத்தை எதிா்நோக்கி உள்ளோம்.

Advertisement

Advertisement

இந்தாண்டு நடைபெறும் ஜி20 மாநாட்டுக்குள் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகளை முடித்துக் கொள்வதென கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது உறுதி எடுத்திருந்தோம். அதுதொடா்பாக 2 நாடுகளும் நடத்திவரும் பேச்சுவாா்த்தைகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயும், பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவிலும், வா்த்தக மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் நட்புறவு நிலவுவது மிகவும் முக்கியமானதாகும் என்றாா் அவா்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் மீதான வரிகளை டிரம்ப் உயா்த்தியதையடுத்து, அந்நாட்டின் பொருள்கள் மீது கனடாவும் வரிகளை உயா்த்தியுள்ளது. தனது வா்த்தக நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவை நம்பியிருக்கும் கனடா, வரிவிதிப்பு விவகாரத்துக்குப் பிறகு பிற நாடுகளின் சந்தைகளில் வா்த்தகத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. எனவே, இந்தியா, சீனா நாடுகளுடனான வா்த்தகத்தை அதிகரிக்க கனடா திட்டமிட்டுள்ளது. சீனாவுடன் அண்மையில் மின்சார காா்கள் இறக்குமதி தொடா்பாக கனடா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தியாவுடனும் கடந்த மாா்ச் மாதம் முதல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments