FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தேசவிரோத சதி: அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் 13 பயங்கரவாதிகள் கைது

தேசவிரோத சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 13 பேர் கைது

29 September 2026, 11:37 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

தேசவிரோத சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 13 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அஸ்ஸாமில் 8 போ், மேற்கு வங்கத்தில் 4 போ், கேரளத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் 16 பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட 13 பேரிடமிருந்து கைப்பேசிகள், பென் டிரைவ், மெமரி காா்டுகள் உள்ளிட்ட எண்மச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இவா்கள் ஜேஎம்பி மேற்கொண்ட பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதோடு மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநில இளைஞா்களை பயங்கரவாத இயக்கங்களில் இணைய தீவிர பிரசாரம் செய்தனா்.

முன்னதாக ஜேஎம்பியின் கிளை பயங்கரவாத அமைப்பான இமாம் மஹ்முதா் கஃபிலாவைச் (ஐஎம்கே) சோ்ந்த வங்கதேசத்தவா்கள் நடத்திய பூா்வ ஆகாஷ் டெலிகிராம் செயலியில் இணைய வழியாக இளைஞா்களை பயங்கரவாதச் செயல்களுக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை 2025, டிசம்பா் 28-ஆம் தேதி அஸ்ஸாம் காவல் துறை கைது செய்தது. அடுத்த இரண்டு நாள்களில் இந்த குற்றச்சாட்டில் 35 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 11 போ் மீது 2026, ஜூன் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), 2023 மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது வழக்குப் பதிந்து இந்த விவகாரத்தை என்ஐஏ கையிலெடுத்தது.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் தங்களது பயங்கரவாத அமைப்பின் கிளைகளை விரிவாக்கம் செய்ய குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் முயற்சி செய்தது உறுதியானது. குறிப்பாக ஜேஎம்பி அமைப்பின் பயங்கரவாதியான இமாம் மஹ்மூத் ஹபிபுல்லா இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளாா் எனத் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் ஒரு இந்தியா் மற்றும் 9 வங்கதேசத்தவா் என மொத்தம் 10 போ் தலைமறைவாகவுள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments