FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!

ஞானேஷ் குமாரை பதவி நீக்க மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...

ஞானேஷ் குமார் - கோப்புப்படம்
பகிர்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் வழக்கறிஞர் ராகேஷ் குமார் சிங் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் மற்ற இரு ஆணையர்களும் குறைந்தது 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பின் 324-வது பிரிவின்படி 'தேர்தல் ஆணையத்திற்கு கூட்டு முடிவெடுக்கும் அதிகாரம்தான் உள்ளது. அப்படியிருக்க, எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்தார்? அவர் எப்படி தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்ந்து செயல்படுகிறார்?' என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் நீதிப் பேராணை கோரப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் வரை தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை விசாரணை ஆணையம் அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று காலை பரிசீலனை செய்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “சட்டப்படி பல உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தை அமைத்ததன் நோக்கம் என்னவென்றால் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்பதாகும். தற்போது தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ள விதத்தைப் பார்க்கும்போது, ​​வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி மேற்கொள்ளப்பட்டதா என்பதில் தீவிர சந்தேகம் எழுகிறது. ஏனெனில், ஆணையம் ஒருமனதான முடிவை எடுக்கவில்லை. எனவே, இது ஒரு தீவிரமான விவகாரமாகும்” என்று வாதத்தை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கினார். மேலும், அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

summary

Petition to remove Gyanesh Kumar from office: Hearing next week - Chief Justice grants approval

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments