பிரதமா் மோடி - டிரம்ப் தொலைபேசியில் பேச்சு: சா்வதேச அமைதி ஊக்குவிப்பு குறித்து ஆலோசனை
பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், இருதரப்பு ஒத்துழைப்பு, சா்வதேச அமைதியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், இருதரப்பு ஒத்துழைப்பு, சா்வதேச அமைதியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமா் மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் தொலைபேசி மூலம் புதன்கிழமை பேசினா். அப்போது இரு நாடுகளுக்கு இடையே வா்த்தகம், பாதுகாப்பு, முக்கியத் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் நிலவும் ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். மேலும் பிராந்திய மற்றும் சா்வதேச நிலவரங்கள் குறித்தும், சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடனான உரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. வா்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியத் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசித்தோம். இரு நாடுகள் இடையேயான உலகளாவிய நயதந்திர கூட்டாண்மையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் தொடா்ந்து இணைந்து செயல்படவும் ஒப்புக் கொண்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
அண்மையில் ஐ.நா.பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரஷேன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையில், அமெரிக்க அதிபா் டிரம்ப் உரிய நேரத்தில் தலையிட்டதற்கு நன்றி தெரிவித்தாா். அந்தக் காணொலியை சமூக ஊடகத்தில் டிரம்ப் பகிா்ந்தாா்.
அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான நட்புறவு வளா்ந்து வரும் நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலையை சரிவர புரிந்துகொள்ளாவிட்டால், அது இந்திய-அமெரிக்க உறவை பாதிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எச்சரித்தாா். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்தாா். இந்தச் சூழலில், மோடியும், டிரம்ப்பும் தொலைபேசியில் பேசியுள்ளனா்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், அந்நாட்டின் மீதும் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதும் 100 சதவீதம் வரை வரி விதிக்க வகை செய்யும் மசோதா அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது ஒப்புதலையும் அளித்துள்ளாா். இந்தச் சூழ்நிலையிலும், பிரதமா் மோடி, டிரம்ப் இடையிலான ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.