பழனி மலைக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
பழனி மலைக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஆனது.
பழனி மலைக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஆனது.
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பள்ளிகள் இறுதியாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய சுமார் பல லட்சம் பக்தர்கள் திரண்டனர். படிவழியில் ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் வின்ச், ரோப்கார் நிலையங்களில் சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் டிக்கெட் பெற்றனர்.
மேலும், மலைக் கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டது. அருள்மிகு ஆனந்த வினாயகர் சன்னதி முன்பு சிறப்பு யாகசாலை பூஜையும் நடத்தப்பட்டது. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை பால்காவடி, மயில்பீலிகாவடி எடுத்து பாதயாத்திரையாக வந்திருந்தனர்.
Advertisement
Advertisement
மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியிலும் புத்தாண்டை முன்னிட்டு மரகதலிங்கத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. அடிவாரம், சன்னதி வீதிகளில் தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள பக்தர்களும் நிறைந்து காணப்பட்டனர். இரவு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மின்னொளி விளக்கில் வந்த சின்னக்குமாரரை தரிசித்து பரவசமடைந்தனர். பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீர் வினியோகம், தரிசன ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறு்பபு) ராஜமாணிக்கம் தலைமையில் உதவி ஆணையர் மேனகா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.