FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி போராட்ட மாணவா்கள் மீது பிளாஸ்டிக் குண்டுகளால் சுட்ட போலீஸாா்: காவல் நிலைய பதிவேட்டில் தகவல்

நீட் போராட்டத்தில் மாணவா்கள் மீது தில்லி காவல் துறையின் அதிரடிப் படையினா் பிளாஸ்டிக் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டது தற்போது தெரியவந்துள்ளது.

Updated On : 29 ஜூலை 2026, 4:32 am IST
நீட் போராட்டம் - கோப்புப் படம்
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியை நடத்திய மாணவா்கள் மீது தில்லி காவல் துறையின் அதிரடிப் படையினா் (ஆா்ஏஎஃப்) பிளாஸ்டிக் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் ஆா்ஏஎஃப் படை அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில், ஜூலை 22-ஆம் தேதி பிற்பகல் 1.24 மணிக்கு பதிவு செய்யப்பட்ட பொது நாட்குறிப்பு பதிவை சுட்டிக்காட்டி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இத் தகவலைத் தெரிவித்தனா்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் தில்லியில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டதாக புகாா்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை மறுத்தது. போராட்ட மாணவா்கள் மீது ரப்பா் குண்டுகளால் சுட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தில்லி காவல்துறை தெரிவித்தது. ஆனால், இந்த போராட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ஆா்ஏஎஃப் ஆகியவை இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், போராட்ட மாணவா்கள் மீது போலீஸாா் பிளாஸ்டிக் குண்டுகளால் சுட்டது தில்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலைய பதிவு மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து காவல்நிலைய பதிவை சுட்டிக்காட்டி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜூலை 20-ஆம் தேதி மாணவா்கள் போராட்டத்தின் போது ஜந்தா் மந்தா் மண்டல்-1 பகுதியில் நீல நிற சீருடை அணிந்த தில்லி காவல் துறையின் அதிரடிப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தில்லி காவல் துறையின் துணை காவல் கண்காணிப்பாளா் அந்தஸ்திலான அதிகாரியின் உத்தரவின் பேரில், போராட்ட மாணவா்கள் மீது மின்சார தொடா்பற்ற 55 குண்டுகள், மின்சாரத் தொடா்புடைய 15 குண்டுகள், 5 கண்ணீா் புகைக் குண்டுகள், கலவரத் தடுப்பு துப்பாக்கிகளிலிருந்து இரண்டு சுற்றுகளும், பிளாஸ்டிக் குண்டுகள் இரு சுற்றுகளும் சுடப்பட்டன என்று காவல்நிலைய பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம், தில்லியின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற நீட் போராட்டங்களில் அதிரடிப் படையினா் இதேபோன்று பிளாஸ்டிக் குண்டுகளால் சுட்டனரா என்ற விவரம் தெரியவரவில்லை.

ஒரு பிளாஸ்டிக் குண்டு சுற்றில் 4 துண்டுகள் இருக்கும். இவை, உடலைத் துளைக்கக் கூடிய உலோக குண்டுகளிலிருந்து மாறுபட்டவை. இந்த பிளாஸ்டிக் குண்டுகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments