பிரதமரை விமர்சித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ: வழக்குப் பதிவு செய்தது தில்லி காவல் துறை
பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான் விமர்சித்து பேசியது தொடர்பான
பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான் விமர்சித்து பேசியது தொடர்பான புகார் மீது நகர காவல் துறை வெள்ளிக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 16-ஆம் தேதி செங்கோட்டையில் தில்லி அரசு நடத்திய விழாவில் கலந்து கொண்ட அமானதுல்லா கான் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விவரம் அடங்கிய விடியோ காட்சிகள் பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த நிலையில், தில்லி காவல் துறை ஆணையர் அலோக் குமாரை தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை சந்தித்து அமானதுல்லாவின் செயல் குறித்து புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக வடக்கு தில்லி கோத்வாலி காவல் நிலையத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் விவேக் கர்க் புகார் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்தப் பின்னணியில் பாஜக அளித்த விடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த காவல் துறையினர் அச்சம்வம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், "பொது அமைதிக்கு குந்தகம் விளைக்க முயன்ற சிலர்' என்று குறிப்பிட்டு பொதுவான வழக்கை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். அதில் அமானதுல்லாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி கூறுகையில், "பாஜகவைச் சேர்ந்த விவேக் கர்க், பாஜக தலைவர்கள் புகார் அடிப்படையில், பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய சிலர் எனக் குறிப்பிட்டு இந்திய தண்டனைச் சட்டம் 504-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். நிகழ்ச்சியில் பதிவான விடியோ பதிவை ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த அமானதுல்லா கான், "தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு விரோதமாகவும் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு செயல்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக குரல் கொடுப்பவர்களை மத்திய அரசு சிறைக்கு அனுப்புகிறது.
அரசின் கொள்கைகளை விமர்சித்தேன். மாணவர் விரோத கொள்கைகளையும், மத்திய அரசை விமர்ச்சிப்பவர்களுக்கு எதிராகவும் பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தேன். இதற்காக என்னை பாஜகவினர் குறிவைத்துள்ளனர்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.