குட்கா ஊழல் முறைகேடு வழக்கு: 2-வது நாளாக ஜார்ஜ் வீட்டில் சிபிஐ சோதனை
குட்கா ஊழல் தொடர்பாக சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை
குட்கா ஊழல் தொடர்பாக சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2013 மே 9-இல் குட்கா, போதைப் பாக்குகளுக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார். இவற்றை விற்க, அரசு, காவல்துறை உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின.
கடந்த 2016 ஜூலை 8-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சென்னை செங்குன்றத்தில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தாவின் குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த ஆவணங்கள் சிக்கின. இதில் அரசுக்கு ரூ.250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. சென்னை காவல் ஆணையராக இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 23 காவல்துறையினர், கலால் வரித்துறையினர், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 2016 ஆகஸ்ட் 11-ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், குட்கா ஊழல் குறித்து சில ரகசியக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பான திமுக மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த ஏப்ரல் 26-இல் உத்தரவிட்டது. தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த மே 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
இதனிடையே கடந்த ஒரு மாதமாக சென்னையில் முகாமிட்டிருந்த சிபிஐ அதிகாரிகள் கடந்த 31-இல் குட்கா கிடங்குக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, மேற்கு முகப்பேரில் உள்ள தமிழக டிஜிபி தே.க.ராஜேந்திரன் வீடு, நொளம்பூரில் உள்ள சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீடு, அண்ணாநகர் மேற்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு, மேற்கு மாம்பலம் மதுரை வீரன் தெரு காவலர் குடியிருப்பில் உள்ள உதவி ஆணையர் மன்னர் மன்னன் மற்றும் 3 உதவி ஆய்வாளர்கள் வீடுகள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் சிபிஐயின் 500 அதிகாரிகள் 35 இடங்களில் நேற்று புதன்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.