டி20 உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ள நிலையில், மூன்றாவது முறை வரலாறு படைக்குமா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு தொடங்கிய டி20 உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியும் மூன்று கோப்பைகளையோ, போட்டியை நடத்தும் அணியோ, நடப்பு சாம்பியன் அணியோ கோப்பையை வென்றது கிடையாது.
இந்த வரலாற்றை உடைத்து மூன்று சாதனைகளையும் தகர்த்தெறிவதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு அருமையான காலம் கனிந்திருக்கிறது. அந்த சாதனையை பதினோரு பேர் கொண்ட குழுவினர் படைப்பார்களாக என்பது அனைவரின் ஆவலாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை இன்று இந்தியா மற்றும் இலங்கையில் ஆரவாரத்துடன் தொடங்குகிறது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக்கோப்பையை நடத்தும் இந்தத் தொடரில் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
நான்கு குழுக்கள்
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
தொடக்க நாளான இன்று மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 11 மணிக்கு பாகிஸ்தான், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. மாலை 3 மணிக்கு முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி - ஸ்காட்லாந்தையும், மாலையில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
20 அணிகள் லீக் சுற்றில் விளையாடி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். 20 அணிகளில் கோப்பையை வெல்லும் அதிரடி சூரர்கள் நிறைந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. இருப்பினும், குறைந்த ஓவர்களைக் கொண்டுள்ள இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறிய அணிகள்கூட பெரிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக அப்செட் கூடிய வகையில் விளையாடும். யாரையும் வெற்றியாளர் என்று கணிக்க முடியாது.
கருத்துக்கணிப்புகள்...
ஐசிசி தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், குரூப்-2-ல் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் -8 சுற்றுக்குத் தகுதி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவேளை 2024 ஆம் ஆண்டு நடைபெற்று உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்து. அதுபோல எதேனும் நிகழ்ந்தால் வேறு அணிகள் சூப்பர் -8 சுற்றில் இடம்பிடிக்கும்.
அதிரடி சூரர்களைக் கொண்ட பேட்டிங் பட்டாளம்
மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணி என்ன ஆகுமோ? என பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை முன்வைத்த நிலையில், சூர்யகுமார் யாதவின் தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுப்பட்ட கோணத்தில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக 9 டி20 தொடர்களை வென்றிருக்கும் இந்திய அணி, அதிரடி பஞ்சமில்லாத பேட்டிங் வரிசை கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக 250 ரன்களுக்கு மேல் குவித்து வரும் இந்திய அணியில் பேட்டிங் ஆட 8 ஆவது வரிசை வரை அதிரடியாக ஆட்டக்கூடிய பேட்டர்கள் இருக்கின்றனர்.
பலம் - பலவீனம்
2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியின் அப்டேட்டட் வெர்ஷனாகவே 2026 உலகக் கோப்பை அணியும் அமைந்திருக்கிறது. உலகின் மிகவும் அச்சுறுத்தக்கூடிய டி20-ல் நம்பர் 1 வீரரான அபிஷேக் சர்மா அதிரடியில் ஜொலிக்கிறார். அவருக்கு துணையாக விக்கெட் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரும் அதிரடியில் மிரட்டுகின்றனர்.
வலது (சஞ்சு சாம்சன்) - இடது (அபிஷேக்) காம்பினேஷன் ஒத்துவராத நிலையில், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஓப்பனிங் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என வரிசையாக அதிரடி சூரர்கள் இந்திய அணியில் உள்ளனர். முதலில் பேட்டிங் ஆடி 200 முதல் 250 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
பந்து வீச்சில் வேகம் - சுழலில் உலகின் முன்னணி பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா - வருண் சக்கரவர்த்தி இருவரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். அவர்களும் குல்தீப் யாதவ், சிராஜ், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் ஒத்துழைப்பு தருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, அக்ஷர் படேல், ஹார்திக் பாண்டியா உள்ளிட்டோரும் சில நேரங்களில் பேட்டர்கள் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, திலக் வர்மாவும் பந்து வீசுகின்றனர். இதனால், இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் வலுவாகவே காணப்படுகிறது.
இந்தியாவின் இதே மட்டையை சுழற்றும் அதிரடி ஆட்டம் பின்னடைவாகவும் வாய்ப்பிருக்கிறது. பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை விடும்பட்சத்தில் இந்திய அணி பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
இந்திய அணிக்கான வாய்ப்புகள்
இந்திய அணி ஓவர்சீஸ் நாடுகளிலும் டி20 கிரிக்கெட்டில் அசத்தி வருகிறது. அதேவேளையில், உள்ளூரில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதலாகவே பலம் சேர்க்கும். மேலும், நன்கு பழக்கப்பட்ட அதிரடிக்கு பலம்சேர்க்கும் ஆடுகளங்களில் இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்க தீவிர முனைப்பு காட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.