முடங்காமல் முயற்சித்தால் உலகம் வசப்படும்: பாராடேக்வாண்டோ ஆசிய சாதனையாளர் பிளஸ்ஸிங் சஜூ!
பாராடேக்வாண்டோ ஆசிய சாதனையாளர் பிளஸ்ஸிங் சஜூ பற்றி...
நாகர்கோவில்: நமது சூழ்நிலை குறித்து கவலைப்பட்டு, முடங்கி விடாமல், மன உறுதியோடு முயற்சித்தால், உலகம் நம் வசமாகும் என்கிறார் பாரா டேக்வாண்டோ ஆசிய சாதனையாளர் பிளஸ்ஸிங் சஜு (26).
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த முட்டைக்காடு அருகேயுள்ள, சரல் விளை பகுதியைச் சேர்ந்த எலியாஸ் - திரேஷ் மேரி தம்பதிக்கு 4 ஆவது மகனாக பிறந்த பிளஸ்ஸிங் சஜு, பிறக்கும் போதே 2 கைகளும் இன்றி பிறந்தார். இவரது 3 சகோதரர்களும், நல்ல உடல்நிலையுடன் இருக்க, இவருக்கு ஏற்பட்ட உடல் குறைபாடு குறித்து, பெற்றோர் கவலை கொண்டாலும் அதனை தங்களது மகனிடம், வெளிப்படுத்தாமல், அவரை ஊக்குவித்தனர்.
பிளஸ்ஸிங் சஜு தனது 5 ஆவது வயதிலிருந்தே, கைகளால் செய்யக்கூடிய பணிகளான சாப்பிடுவது, எழுதுவது, கைப்பேசி பயன்படுத்துவது போன்றவற்றை, கால்களால் செய்ய பழகிக் கொண்டார்.
Advertisement
Advertisement
அவரை, அவரது பெற்றோர் மற்ற குழந்தைகளை போல முட்டைக்காடு அரசுப் பள்ளியில் சேர்த்தனர். அங்கு 8 ஆம் வகுப்பு வரை பயின்றவர், தொடர்ந்து பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை பயின்றார். தனது B.Com., பட்டப்படிப்பை என்.ஐ. கல்லூரியில் படித்தார்.
10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புக்கான, தேர்வுகளை காலால் எழுதி தேர்ச்சி பெற்றார்.
ஆரம்பத்தில் சஜுவுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், டேக்வாண்டோ அவரது வாழ்க்கையை மாற்றியது. கடந்த மே மாதம் மங்கோலியா நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பாரா டேக்வாண்டோ போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 112 பேர் கலந்து கொண்டனர். இதில், பிளஸ்ஸிங் சஜு முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளார்.
இது குறித்து, பிளஸ்ஸிங் சஜுவிடம் பேசியபோது, எனது உடல் குறைபாடு, எனது இளவயதில், மனக் கஷ்டத்தை தந்தது. ஆனால், எனது பெற்றோர், மற்றும் எனது 3 அண்ணன்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அளித்த ஊக்கம்தான் எனது இந்த சாதனைக்கு வித்தாக அமைந்தது. நான் என்றுமே என்னை தாழ்வாக கருதியதில்லை.
ஆசிய டேக்வாண்டோ போட்டிக்கு செல்ல என்னிடம் பணம் இல்லாத நிலையில், விஜய் வசந்த் எம்.பி. எனக்கான பயணச் செலவுத் தொகை ரூ. 4 லட்சத்து 30 ஆயிரத்தை அளித்தார். அதனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அதுமட்டுமல்ல, நான் பாராடேக்வாண்டோ போட்டியில், வெற்றி பெற்று திரும்பிய போது எனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடி என்னை வரவேற்றது பெருமையாக இருந்தது. நமது உடலில் குறைபாடு இருந்தாலும், அதனை மனதில் கொண்டு முடங்கி விடாமல், மன உறுதியோடு முயன்றால், உலகம் நம் வசப்படும்.
எனது விளையாட்டு திறனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு எனக்கு ஒரு பணி வழங்கினால், அதிலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்றார் அவர்.
The world is within reach if one perseveres without giving up: Para-Taekwondo Asian record holder Blessing Saju.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.