யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சோனம் வாங்சுக் பற்றிய பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன.
நீட் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்காக, கரப்பான் பூச்சி மக்கள் கட்சி சார்பில், தில்லியில் ஜந்தர் மந்தரில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக், ஒரு போராட்டக்காரராகத்தான் பெரும்பாலான இந்தியர்களுக்கு அறிமுகமாகியிருப்பார்.
ஆனால், அவர் பொறியாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர், கண்டுபிடிப்பாளராகவும் உள்ளார். நண்பன் படத்தில் பலரும் வியந்து பார்த்த விஜய்யின் கதாபாத்திரமான கொசக்சி பசப்புகழ் என்ற கற்பனை கதாபாத்திரம் சோனம் வாங்சுக்கை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாகவும் பரவலாக ஒரு பேச்சு எழுந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீட் முறைகேடு, உயா்கல்வி போட்டித் தோ்வுகளின் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
சோனம் வாங்சுக் ஜந்தா் மந்தருக்கு வந்து காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி இன்றுடன் 20 நாளாகின்றன. அவரது உடல்நிலை மிக மோசமாகியிருக்கும் நிலையில், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்குமாறு உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது.
யார் இவர்?
மெக்கானிகல் பொறியியல் படித்த சோனம் வாங்சுக், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் பகுதியில் லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கம் எனும் அமைப்பை நிறுவி கல்விச் சேவையை வழங்கி வருகிறார். இவரது பள்ளியில் படிக்க ஒரே தகுதிதான், வகுப்பில் தோல்வியடைந்திருக்க வேண்டும். ஒரு பொறியாளராக இப்பள்ளியில் புதுமையான தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார் வாங்சுக்.
கல்வியால் ஒரு பொறியாளரும், நீரைச் சேமிப்பதற்கான ஐஸ் ஸ்தூபி என்ற செயற்கைப் பனியாற்றின் கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக், இந்தியாவின் லடாக் என்ற இமயமலைப் பகுதியில் கல்வி சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
1966ஆம் ஆண்டு லே மாவட்டத்தில் பிறந்தவர் வாங்சுக். வீட்டுக்கு அருகே பள்ளிகள் இல்லாததால் 9 வயது வரை பள்ளி செல்லவில்லை. அதன் பிறகு அவர் சேர்ந்த பள்ளியில் உருது மொழியில் கற்பிக்கப்பட்டதால், இவருக்குப் பாடங்கள் புரியவில்லை. இதனால் இவர் பின்தங்கிய மாணவராகக் கருதப்பட்டார். ஆசிரியர்களால் மோசமாக நடத்தப்பட்ட நிலையில், தில்லி வந்து படித்து மெக்கானிகல் பொறியியலில் பிடெக் பட்டம் பெற்றார்.
உடனடியாக லடாக் பகுதியில் கல்வியில் தோல்வியடையும் மாணவர்களுக்காக கல்விப் பணியைத் தொடங்கினார். பல்வேறு தன்னலமில்லா அமைப்புகளை உருவாக்கினார். கல்வி ஆலோசகராகப் பணியாற்றினார்.
பனிக் கோபுரங்கள்
2013-ஆம் ஆண்டு, வாங்சுக் பனிக் கோபுரங்களின் மாதிரி ஒன்றை உருவாக்கினார். இது, குளிர்காலங்களில் வற்றிப்போகும் ஓடை நீரை மாபெரும் பனிக் கூம்புகள் அல்லது கோபுரங்கள் வடிவில் சேமித்து, வசந்த காலத்தின் பிற்பகுதியில் அவை உருகத் தொடங்கும் போது அந்த நீரை வெளியேற்றும் ஒரு செயற்கை ஆறு போன்ற அமைப்பு. இதன்படி, இரண்டு மாடிகளைக் கொண்ட கோபுரம் போன்ற கூம்பு வடிவ கட்டட அமைப்பிற்குள் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் பனியை அதற்குள் சேமித்து வைத்து விடலாம். கோடைக்காலம் தொடங்கும்போது, அதிலிருந்து உருகும் நீரை விவசாயிகள் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கண்டுபிடிப்பையடுத்து, அவர் பல்வேறு அரசுத் துறைகளிலும் ஆலோசனை வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்தார்.
மண் கட்டடங்கள் என்ற புதிய படைப்பு
லடாக் போன்ற மலைப்பாங்கான மிகுந்த குளிர்ப் பகுதிகளில், ஆற்றல் சேமிப்பு முறைகள் மூலம் 'பேசிவ் சோலார்' (passive solar) என்ற தொழில்நுட்பம் சார்ந்த பல மண் கட்டடங்களை வடிவமைத்தார்.
இங்கெல்லாம் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடிய குளிர்காலத்தில்கூட, அழுத்தப்பட்ட மண் என்ற தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட அவரது சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பள்ளி, மாணவர்களுக்கு வெதுவெதுப்பான சூழலைக் கொடுத்தது.
சூரிய சக்தியுடன் நகரும் கூடாரங்கள்!
கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீரர்கள் மிக மோசமான பனிப் பகுதியில் பணியாற்றுவது குறித்து அறிந்த சோனம், லடாக் போன்ற பனி சூழ்ந்த எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் இந்திய ராணுவத்தினருக்காக சூரிய சக்தியுடன் இடம்மாற்றக் கூடிய கூடாரங்களை உருவாக்கினார். ஒவ்வொரு கூடாரத்திலும் 10 வீரர்கள் தங்கியிருக்கலாம்.
கூடாரங்களின் மேற்பகுதிகளில் சூரிய சக்தியை சேமிக்கும் அமைப்புகள் மூலம் பகலில் சூரிய சக்தியை பெற்று அதனைக் கொண்டு கூடாரம் இரவில் வெதுவெதுப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இது இவரது மிகப் பெரிய அடையாளமாக மாறியது.
வாழ்வில் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரரான சோனம் வாங்சுக், முதல்வர் விஜய் நடிப்பில் உருவான நண்பன் படத்தில் வரும் விஞ்ஞானி கொசக்சி பசப்புகழ் கதாபாத்திரத்தையொட்டி இருந்ததாக அப்போது பலராலும் பேசப்பட்டது.
தற்போது, இவர் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் வினாத் தாள் கசிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தில்லியில் மிகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கட்சிகளும் தங்களது ஆதரவை அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரை மத்திய அரசு இந்த போராட்டம் பற்றி வாய் திறக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டிருக்கும் நிலையில் விரைவில் மௌனம் கலைக்கப்படலாம்.
Who is this Sonam Wangchuk? Is he the same person who inspired the character 'Phunsukh Wangdu' in the movie Nanban
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.