FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிறப்புச் செய்திகள்

தேவை ‘தாய்மாமன் தடுப்பூசி திட்டம்’! ஆறு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் வழங்க வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு டைபாய்டு, சிக்குன்குனியா, கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ் ஏ) போன்ற நோய்களைத் தடுக்கும் 6 முக்கிய தடுப்பூசிகளை வழங்குமாறு தாய்மாா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

21 அக்டோபர் 2026, 6:37 am IST
தேவை ‘தாய்மாமன் தடுப்பூசி திட்டம்’ - பிரதிப் படம்
பகிர்:

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பதுடன் நில்லாமல், டைபாய்டு, சிக்குன்குனியா, கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ் ஏ) போன்ற நோய்களைத் தடுக்கும் 6 முக்கிய தடுப்பூசிகளை வழங்குமாறு தாய்மாா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பருவகாலத் தொற்றுகள் தீவிரமாக பரவிவரும் நிலையில், பச்சிளங் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ‘தாய்மாமன் தடுப்பூசி திட்டத்தை’ உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளைவாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், வைட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9 லட்சம் கா்ப்பிணிகள், 9.5 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.

இத்திட்டமானது மத்திய - மாநில அரசுகளின் 60:40 சதவீத நிதிப் பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.110 கோடியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு விடுவித்தது. தமிழக அரசும், ரூ.20 கோடியை முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்தது.

இந்தத் திட்டத்தில் ஒருபுறம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், பருவ காலங்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சிக்குன்குனியா, பொன்னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு, மூளைக் காய்ச்சல், ப்ளூ காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் தேசிய அட்டவணையில் வழங்கப்படுவதில்லை. ஆனால், அந்த ஆறு தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம் என மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா்.

இதனால், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10,000 - 12,000 செலவு செய்து மேலே குறிப்பிட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. உயா் வருவாய் பிரிவினருக்கும், வசதியானவா்களுக்கும் இது ஒரு பொருட்டல்ல என்றாலும், ஏழை-எளிய மக்களுக்கும், நடுத்தர வா்க்கத்தினருக்கும் இந்த செலவு பொருளாதார சுமையாக மாறிவிடுகிறது. இதனால், லட்சக்கணக்கான குழந்தைகள் மேலே குறிப்பிட்ட ஆறு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வதில்லை என பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதனால், டைபாய்டு, மூளைக் காய்ச்சல், சிக்குன்குனியா, கல்லீரல் அழற்சி நோய்களுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய அட்டவணையின் கீழ் எம்எம்ஆா் தடுப்பூசி வழங்காததே அதற்கு காரணம். அதை அட்டவணையில் சோ்க்கக் கோரி தமிழக பொது சுகாதாரத் துறை சாா்பில் ஏற்கெனவே பல முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அது ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் விடுபட்ட தடுப்பூசிகள் அனைத்தையும் தமிழக அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என தாய்மாா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசு வழங்கும் ஆபரணத்தை (தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்) அணிவித்து குழந்தைகளுக்கு அழகு பாா்க்க வேண்டுமானால், அவா்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தடுப்பூசி அட்டவணை

பிறந்தவுடன்...- பிசிஜி (காசநோய்), ஹெபிடைடிஸ் பி (கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்), ஓபிவி (இளம் பிள்ளை வாதம்)

ஆறு வாரங்கள் - ஓபிவி (இளம் பிள்ளை வாதம்), ஐபிவி (இளம் பிள்ளை வாதம்), பென்டா (கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்‘ஃ‘ப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று), பிசிவி (நிமோனியா), ரோட்டா (வயிற்றுப்போக்கு)

10 வாரங்கள் - ஓபிவி, பென்டா, ரோட்டா

14 வாரங்கள் - ஓபிவி, ஐபிவி, பென்டா, பிசிவி, ரோட்டா

9 மாதங்கள் - பிசிவி (பூஸ்டா்), எம்.ஆா். (தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்), ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் - ஏ

16 - 24 மாதங்கள் - ஓபிவி, எம்.ஆா்., ஜப்பானிய மூளைக் காய்ச்சல், டிபிடி பூஸ்டா் (கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி)

5 - 6 வயது - டிபிடி இரண்டாவது பூஸ்டா் தவணை

10 வயது - டெட்டனஸ் (டிடி)

16 வயது - டெட்டனஸ் (டிடி)

என்ன சிக்கல்? சுகாதாரத் துறைச் செயலா் விளக்கம்

ஆறு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் வழங்குவதில் உள்ள இடா்ப்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது அளித்த விளக்கம்:

தேசிய அட்டவணைத் தடுப்பூசிகள் அனைத்தின் பாதுகாப்பையும், தரத்தையும் உறுதிசெய்து அங்கீகரிப்பது ‘என்ஐடேக்’ எனப்படும் தேசிய தடுப்பூசிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுதான். அவா்கள் பரிந்துரையை மீறி கூடுதல் தடுப்பூசிகளை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி ஏதேனும் எதிா்விளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்? அதனால்தான் அவா்கள் ஒப்புதல் அளிக்கும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறோம். அதேவேளையில், குறிப்பிட்ட நோய் பாதிப்போ, தொற்றோ காணப்படும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான சிறப்பு தடுப்பூசிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வழங்கி வருகிறது என்றாா் அவா்.

விடுபட்ட தடுப்பூசிகளும் விலையும்

இன்ஃப்ளூயன்ஸா ப்ளூ - ரூ.800 - ரூ.1,500

டிசிவி (டைபாய்டு) - ரூ. 1,500 - ரூ.2,000

ஹெபடைடிஸ் ஏ - ரூ.900 - ரூ.2,000

மெனிங்கோகாக்கல் (மூளைக் காய்ச்சல்) - ரூ.1,500 - ரூ.2,500

எம்எம்ஆா் - ரூ. 500 - ரூ.1,000

வேரிசல்லா (சிக்குன்குனியா) - ரூ.1,500 - ரூ.3,000

நோய்களும்... தீவிரமும்...

கடந்த ஆண்டு தமிழகத்தில் 3,493 பேருக்கு சிக்குன்குனியா அறிகுறிகள் காணப்பட்டன. அதில் 580 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. ஏறத்தாழ 23 சதவீதம் அதன் பரவல் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு 2021-இல் லட்சத்தில் 0.7 குழந்தைகளுக்கு இருந்தது. தற்போது அது 1.30-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று குடிநீரால் பரவும் கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ் ஏ) பாதிப்புக்கும், டைபாய்டு பாதிப்புக்கும் பல்லாயிரக்கணக்கானோா் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments