FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எச்-1பி விசா வைத்திருப்போரின் இணையர் பணி அனுமதி ரத்து? எவ்வளவு இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்?

எச்-4 விசா வைத்திருப்பவர்களின் பணி அனுமதியை ரத்து செய்யும் அமெரிக்காவின் திட்டம் பற்றி...

1 செப்டம்பர் 2026, 4:45 pm IST
டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
பகிர்:

எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை இணையர் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரியும் அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

எச்-4 விசா என்றால் என்ன?

அமெரிக்க நிறுவனங்களால் எச்-1பி விசாவில் ஒருவர் பணியமர்த்தப்படும்போது, அவர்களின் வாழ்க்கை இணை மற்றும் குழந்தைகள் எச்-4 விசா மூலம் அமெரிகாவில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விசா மூலம் அவர்கள் சார்ந்திருப்பவர்களாக (dependents) அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

தொடக்கத்தில், எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி இல்லை. ஆனால், 2015-ல் ஒபாமா ஆட்சி காலத்தில் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, எச்-1பி விசா வைத்திருப்பவர் 'வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு' செயல்முறை மூலம் நிரந்தரக் குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அவர்களின் எச்-4 விசா வைத்திருக்கும் வாழ்க்கை இணையர்கள் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கிரீன் கார்டுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் குடும்பங்களுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குடியேற்ற விசா விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அவர்களுக்கு இரண்டாவது வருமான ஆதாரத்தை வழங்கியது.

தற்போது, ​​டிரம்ப் நிர்வாகம் இந்தக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை தொடங்கியுள்ளது.

எச்-4 விசா பணி அனுமதி ரத்து

எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை இணையர்கள், எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரியும் அனுமதியை ரத்து செய்வதற்கான நடைமுறையை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது.

தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான அலுவலகத்தின் ’Reginfo.gov’ என்ற இணையதளத்தில், “பணிக்கான அனுமதியைப் பெற தகுதியுள்ள குடியுரிமை பெறாதவர்கள் பிரிவிலிருந்து எச்-4 விசா வைத்திருப்பவர்களை நீக்குதல்” என்ற தலைப்பில் முன்மொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், எச்-1பி விசா வைத்திருப்பவரின் வாழ்க்கை இணையர்களுக்கு எச்-4 விசா மூலம் இனி அமெரிக்காவில் பணிபுரிய முடியாது. புதிதாக யாருக்கும் அனுமதி வழங்கப்படாது, ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

இந்த புதிய விதிமுறைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், எச்1-பி விசாவால் அதிகம் பயனடைபவர்களான இந்தியர்களே இதனால் பாதிக்கப்படுவார்கள்.

எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்?

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் தரவுகளின்படி, எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 7,30,000 ஆகும். அவர்களுடன் சார்ந்திருப்பவர்களாக (dependents) கூடுதலாக 5,50,000 பேரும் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களே ஆவர். 2024-ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட எச்-1பி விசா விண்ணப்பங்களில் 71 சதவிகிதம் இந்தியர்கள். இரண்டாவது இடத்தில் இருந்து சீனாவைச் சேர்ந்தவரகள் வெறும் 12 சதவிகிதமே ஆகும்.

எச்-4 விசா வைத்திருப்பவர்கள் குறித்த தரவுகளை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் வெளியிடுவதில்லை என்றாலும், எச்-1பி விசாவை யார் அதிகம் வைத்திருக்கிறார்களோ, அவர்கள்தான் எச்-4 விசாவையும் வைத்திருப்பார்கள்.

ஒரு தனியார் அமைப்பின் ஆய்வில், 1.25 லட்சத்துக்கும் அதிகமாக இந்தியர்கள் எச்-4 விசா வைத்திருப்பதாக தெரியவந்தது. இதில், 94 சதவிகிதம் பேர் பெண்கள். மொத்த எச்-4 விசா எண்ணிக்கையில் 93 சதவிகிதமாகும்.

இந்த 94 சதவிகித இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் சார்ந்த உயர் திறன் தேவைப்படும் துறைகளில் பணியாற்றுவதாக ஆய்வில் தெரியவந்தது.

இதுபோன்று எச்-4 விசா வைத்திருப்பவர்கள் பணி அனுமதியை ரத்து செய்வது இது முதல்முறையல்ல. டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்திலேயே இதுபோன்ற நடவடிக்கையைத் தொடங்கி, நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

ஏற்கெனவே, புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு கூடுதலாக சுமாா் ரூ. 98 லட்சம் கட்டணம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ள நிலையில், தற்போது எச்-4 விசா வைத்திருப்பவர்கள் பக்கமும் திரும்பியுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

summary

Plan to revoke work authorization for H-1B visa holders' spouses! How many Indians will be affected?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments