வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  
தற்போதைய செய்திகள்

வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

DIN

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார்.

நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டப்பேரவைப உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றுள்ளனர்.

உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பொருளதாரத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம்

* முதல்வர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி, பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் பிடித்துள்ளது.

* கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம், நிலக்கடலை உற்பத்தியில் 3 ஆவது இடம், கரும்பு உற்பத்தியில் 2 ஆவ இடம் பெற்றுள்ளது. வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்கும்.

1.86 லட்சம் மின் இணைப்புகள்

* 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.

147 லட்சம் டன் நெல் கொள்முதல்

* 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,

பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு

* டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

* கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்!

431 இளைஞர்கள் தொழில் முனைவோர்

* வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.

கரும்பு உற்பத்தியில் 2 ஆவது இடம்

* கரும்பு உற்பத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகித்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

1000 முதல்வர் உழவர் நல சேவை மையம்

* முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு நிதி உதவி உயர்வு

* முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்கலுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லடச்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இறுதி சடங்கி நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

முதல்வர் மன்னுயிர் காப்போம் திட்டம்

* முதல்வர் மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.146 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இந்த திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.

மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம்

* மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது

* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்

* நெல் சாகுப்படியை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* உழவர்களை அவர்களை கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடங்கப்படும்.

* மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கப் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுவைதாளிதப் பயிர்களுக்கான சிறப்புத் திட்டம்!

* சுவைதாளிதப் பயிர்களின் சாகுப்படியை ஊக்குவிக்கவும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள் ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நுண்ணீர் பாசனத் திட்டம்

* நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.1.166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலப் பயிர்த் திட்டம்

* கோடைக்காலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்

* தென்னை பரப்பு விரிவாக்கம், ஊடுபயிர் சாகுபடி, மறுநடவு மற்றும் புத்தாக்கம், செயல்விளக்கத்திடல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.35.26 கோடி ஒதுக்கீடு.

சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்டது ராக்கெட்!

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்

* மக்களின் ஊட்டச்சத்து தேவையா உறுதி செய்வதுடன், விவசாயிகள் வருமானத்தை உயர்த்திட ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் உருவாக்கப்படும்.

* தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருள்கள் உழவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

* 100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல்.

தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை

* பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை உருவாக்கப்படும்.

பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்

* பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட ரூ.12.21 கோடியில் பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம் உருவாக்கப்படும்.

உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள்

* உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.

* உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.

* நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களிந் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் கொண்டுவரப்படும்.

* ரூ.21 கோடியில் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதாரச் சுமையினை குறைக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

* உயிர்ம விளைப்பொருள்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும்.

* சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.53 கோடிய 44 லட்சத்தில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அமைக்கப்படும்.

ரூ.108 கோடியில் எண்ணெய் வித்துகள் இயக்கம்

* உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய ரூ.108 கோடிய 6 லட்சத்தில் எண்ணெய் வித்துகள் இயக்கம் அமைக்கப்படும்.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்

* மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.

7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள்

* ரூ.15.05 கோடியில் 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.

* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும்.

ரூ.15.05 கோடியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூ.15.05 கோடியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்

* ரூ.10.63 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.

* கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு.

ரூ. 2.4 கோடியில் பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடி

* பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ. 2.4 கோடி ஒதுக்கீடு.

அறுவடைப் பின்செய் மேலாண்மை ஊக்குவிப்பு

* அக்டோபர் மாதங்களில் வெங்காயத்தின் உற்பத்தி குறைவதால், வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, வெங்காயத்தினைச் சேமித்து வைத்து மகசூல் குறையும் நேரங்களில் விற்பனை செய்வதற்காக 36,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி மத்திய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்.

ரூ.8.51 கோடியில் மலர் சாகுபடி திட்டம்

* விவசாயிகளின் நாள்தோறும் வருமானம் ஈட்டும் வகையில் நிலையான வருமானத்தை ஈட்டும் வகையில் மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.8.51 கோடியில் மலர் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மல்லிகைக்கான சிறப்புத் திட்டம்

* நாள்தோறும் வருமானம் ஈட்ட பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடியில் மல்லிக்காக்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.

நறுமண ரோஜாவிற்கான சிறப்புத் திட்டம்

* நாள்தோறும் வருமானத்தை ஈட்ட உதிரி வகை ரோஜா மலர்களின் சாகுபடியை 500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.1 கோடியில் நறுமண ரோஜாவிற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி

* வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ரூ.1 கோடி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்.

* சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு ரூ.16 கோடியில் தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்

* காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ரூ.1.35 கோடியில் திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.

5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு

* நல்லூர் வரகு(கடலூர்), வேதாரண்யம் முல்லை(நாகப்பட்டினம், நத்தம் புளி(திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா(திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை(திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு. இதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம்!

* 51 நீர்வடிப்பகுதிகளில் 39,910 ஹெக்டர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ரூ.68 கோடியில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்படும்.

பொருளீட்டு கடன்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

* வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்.

* உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்கு எடுத்து சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.

உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும்

* தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் ரூ.8 கோடி செலவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* ரூ.39 கோடியே 20 லட்சம் செலவில் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒருங்கிணைக்கப்படும்.

ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

* ரூ.20 கோடி செலவில் 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

* ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படும்.

மதிப்புக்கூட்டு மையங்கள்

ரூ.50 கோடி செலவில் வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

* ரூ.1.84 கோடி செலவில் 300 கிராமப்புர இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

* ரூ.2.50 கோடி செலவில் திறந்த வெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும்.

100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள்

* ரூ.2.75 கோடி செலவில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கப்படும்.

* ரூ.1.50 கோடி செலவில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும்.

சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள்

* ரூ.1.50 கோடி செலவில் மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

ரூ.1.50 கோடி செலவில் தூர்வாரும் பணிகள்

* ரூ.1.50 கோடி செலவில் காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள "சி" மற்றும் "டி" பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் செயல்படுத்தப்படும்.

இ-வாடகை செயலியில் வேளாண் இயந்திரங்கள் வாடகை

* ரூ.1.50 கோடி செலவில் இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்தப்படும்.

* ரூ.1.50 கோடி செலவில் சிறு,குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் உருவாக்கப்படும்.

மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள்

* ரூ.1.50 கோடி செலவில் 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.

வெண்ணைப்பழ சாகுபடி ஊக்குவித்தல்

ரூ.1.50 கோடியில் ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழ சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிட ஊக்குவிக்கப்படும்.

பலா மேம்பாட்டு இயக்கம்!

"முன்றில் பலவின் படுசுகளை மரீஇப்

புன்தலை மந்தி துர்ப்ப" என வீட்டு முற்றத்தில் பழந்தமிழர் வளர்த்த பலா மரத்தினைப் பற்றிய குறிப்பு நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் பலாவிற்குச் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, பரப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண்மை, சிறிய அளிவிலான பலா பதப்படுத்தப்படும் அமைப்பு, பலா சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி ஆகியவற்றுக்கு மானியம் வழங்கிட ரூ.3 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 2,876 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

2025-26 ஆம் ஆண்டில் புதிய ரக பலா சாகுபடி பரவலாக்கம், பலாவில் ஊடுபயிர் சாகுபடி போன்ற திட்டகூறுகள் ஊக்குவிக்கப்படும். இதற்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பனை மேம்பாட்டு இயக்கம்!

"நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையிந் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்" என நாரை விடு தூது பாடலில் பனை குறித்த குறிப்புகள் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம், தமிழர்களிந் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவும், முக்கியத்துவம் வாய்ந்த பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நான்கு ஆண்டுகளாகப் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2025-26 ஆம் ஆண்டில் பனை சாகுபடியை ஊக்குவிக்க பத்து லட்சம் பனை விதைகள், பனை மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் கூடங்கள், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி ஆகிய இனங்களுக்கு, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ஒரு கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள்.

ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்

தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகமாக பயிரிடப்படுகிறது. முந்திரி தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு 43 ஆயிரத்து 460 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும். இதனால் முந்திரி சாகுபடி செய்யும் உழவர்களும், அதனைச் சார்ந்த தொழில் செய்யும் கிராமப்புர மக்களும் அதிகயளவில் பயனடைவார்கள்.

9 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகள்

2025-2026 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் பழச்செடித் தொகுப்புகள் வழங்கப்படும்.

1 லட்சம் இல்லங்களுக்கு 17 சதவிகிதம் மானியத்தில், பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

5 காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.

15 லட்சம் குடும்பங்களுக்கு காய்கறி விதைகள் தொகுப்புகள்

6 வகையான காய்கறிகள் விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்

ஊரகப்பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு நாட்டுக் கோழிப்பண்களை அமைப்பதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கான நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT