விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 21 பேர் பலி: அன்புமணி இரங்கல்
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அன்புமணி இரங்கல் குறித்து...
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கொடிய விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
தனியார் பட்டாசு ஆலையில் குறுகிய அறையில் அதிக தொழிலாளர்கள் பணி செய்ததும், பாதுகாப்பற்ற முறையில் வீரியம் மிக்க வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதும் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இத்தகைய விதிமீறல்களை திமுக் அரசு கண்டு கொள்ளாதது தான் அப்பாவித் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஒரே பட்டாசு ஆலையை ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு குத்தகைக்கு விடுவதால், ஒரே நேரத்தில் 4 பிரிவினர் அளவுக்கு அதிகமாக பட்டாசு தயாரிக்க முயல்வது, நாள் கூலிக்கு பதிலாக, உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊதியம் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் வேசமாக பட்டாசு தயாரிப்பது ஆகியவை தான் விபத்துகளுக்கு காரணமாகும்
இந்த ஆபத்தான முறைகளை தடுக்க வேண்டும்; கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை பாமக பல முறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அடி முதல் நுனி வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் ஊடுருவியுள்ள திமுக அரசின் நிர்வாகத்தில் விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. திமுகவின் இந்த தீய நடவடிக்கைகளால் தான் அப்பாவிகளின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.
2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 16 பட்டாசு விபத்துகள் நடந்தன. அவற்றில் 37 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஐ தாண்டியுள்ளது. இன்றைய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. திமுக ஆட்சியில் மட்டும் 170-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்கும், பட்டாசு ஆலை தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு துப்பற்ற அரசு திமுக அரசு என்பதற்கு இது தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.
வச்சக்காரப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடும் தொழிலாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பட்டாசு ஆலை விபத்துகளைக் கட்டுப்படுத்த புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
21 Killed in Virudhunagar Firecracker Factory Accident: Anbumani Expresses Condolences
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.