காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா சனிக்கிழமை காலை(பிப்.21) கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்பாக...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா சனிக்கிழமை காலை(பிப்.21) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மாசித்திருவிழா தொடக்க நிகழ்வையொட்டி காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடிப் பட்டம் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பல்லக்கில்வைத்து கோவில் ஸ்தானிகர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி கொடிமரம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
Advertisement
Advertisement
பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியானது கோவில் தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்றத்தின் போது வண்ண மலர்கள் தூவப்பட்டன.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
கொடியேற்ற விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மாசித்திருவிழாவையொட்டி, நாள்தோறும் காலை,மாலை வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி நகரின் ராஜ வீதிகளில் வீதியுலா வரவுள்ளார்.
கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளர் ந. சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி. ஜீவானந்தம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்வு முடிந்தவுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் ராஜ வீதிகளில் வீதியுலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. மாா்ச் 4- ஆம் தேதி விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடா்ந்து விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தானிகர்கள் சங்கர மடத்தின் நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
The Kamakshi Amman Temple Maasi festival began with flag hoisting
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.