அண்ணாமலையின் புதிய இயக்கம் யாருக்காக, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது?
அண்ணாமலையின் புதிய இயக்கம் யாருக்காக, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது என முத்தரசன் பேசியிருப்பது குறித்து...
திருச்சி: இந்திய குடிமக்கள் மற்றும் வயது வந்த அனைவரும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளை தொடங்கலாம். ஆனால், அண்ணாமலையின் புதிய இயக்கம் யாருக்காகத் தொடங்கப்படுகிறது, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது என்பது போகப் போகத்தான் தெரியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்தார்
திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு, மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற விரிவான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இரா.முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்குப் பெரும் பயனளிக்கும் வகையில், ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' கொண்டு வரப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த திட்டத்தைச் சீர்குலைக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் உச்சகட்டமாக, தற்போது இந்த திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரையே நீக்கிவிட்டு, ஜி-ராம்ஜி எனப் புதிய பெயரைச் சூட்டியுள்ளனர்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் முறையையும் முற்றிலுமாக மாற்றி, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.9,95,692 கோடி ஆகும். இதில் வெறும் ரூ.3,926 கோடி மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழகத்திற்கு மொத்த நிதியில் 10% வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 4.10% ஆக மிக மோசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்திற்கும் நிதி குறைக்கப்பட்டுள்ள அதே வேளையில், உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பன்மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் தன்னிச்சையான போக்கைக் கண்டித்தும், வேலை உறுதித் திட்டத்தைப் பழையபடியே செயல்படுத்த வலியுறுத்தியும், கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று( ஜூன் 5) நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஜோசப் விஜய் இந்த பிரச்னை குறித்து விவாதித்து, நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, வரும் ஜூன் 23-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். மாநில அரசும் இந்த போராட்டத்தின் கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய குடிமக்கள் மற்றும் வயது வந்த அனைவரும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளைத் தொடங்குவதற்கு முழு உரிமை உண்டு. அதுபோல யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், அது யாருக்காகத் தொடங்கப்படுகிறது, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது என்பது போகப் போகத்தான் தெரியும் என்றார்.
பேட்டி: முத்தரசன், மத்திய கட்டுப்பட்டு குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.