முகப்பு
தற்போதைய செய்திகள்

அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த கிடந்த பாம்பு!

அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த கிடந்த குட்டிப் பாம்பு குறித்து...

Updated On : 8 ஜூன் 2026, 10:33 am IST
கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த கிடக்கும் குட்டிப் பாம்பு
பகிர்:

போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த குட்டிப் பாம்பு ஒன்று கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த குடும்பத்தினர் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்தப் பொட்டலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், பந்துர்னா மாவட்டம், கார்காட் கம்தி கிராமத்தை சேர்ந்தவர் வச்சல பாய் துர்வே. கர்ப்பிணிப் பெண்ணான இவர் அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொட்டலத்தை வாங்கி வந்துள்ளார்.

Advertisement

Advertisement

வீட்டிற்கு வந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தை குடும்பத்தினர் திறந்து பார்த்தபோது, உள்ளே இறந்த குட்டிப் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நல்வாய்ப்பாக, அவர்கள் யாரும் அந்த உணவை சாப்பிடவில்லை.

இந்த சம்பவம் குறித்து அந்தக் குடும்பத்தினர் உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களுக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, திட்ட அதிகாரி உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், நந்தன்வாடி காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதிகாரிகள் அந்தப் பொட்டலத்தைக் கைப்பற்றி, அதிகாரப்பூர்வ ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்காக அந்தச் சத்துணவின் மாதிரி ஒன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொறுப்பு ஆட்சியர் அக்ரிம் குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சத்துணவுப் பொட்டலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரி உணவுப் பாதுகாப்பு அதிகாரியால் கைப்பற்றப்பட்டு, போபாலில் உள்ள மாநில உணவுப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆய்வக அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் அந்த பகுதி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி அமைப்பு மூலம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த அந்த பகுதி மக்கள், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் சத்துணவுப் பொருள்களின் தரத்தை முறையாகச் சோதிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறும் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

summary

Dead Snake Found In Food Packet Given To Pregnant Woman At Madhya Pradesh Anganwadi Centre Officials took possession of the packet and prepared an official inspection report.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.