பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்
பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து...
பிலிப்பின்ஸ்: பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில், ஒருவர் பலியானதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள மின்டானோ மாகாணத்தின் சரங்கனி பகுதிக்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 5.7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் சுமார் 93 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளன. பூமிக்கடியில் 79 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டடங்கள் சேதமாகின. ஒருவர் பலி, நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்த வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மீட்புப் பணிகளுக்கு பின்னரே சேதங்கள், பலிகள் குறித்த விவரம் தெரிய வரும்.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பூமியின் மேற்பரப்பு முதல் சுமார் 700 கிலோமீட்டர் ஆழம் வரையிலான எந்தப் பகுதியிலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என பிலிப்பின்ஸ் நில அதிர்வு மையம் எச்சரித்துள்ளதால், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிலிப்பின்ஸில் 0 முதல் 700 கி.மீ வரையிலான இந்த நிலநடுக்க வரம்பு மேலோட்டமானவை, இடைநிலை மற்றும் ஆழமானவை என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.
0 முதல் 70 கி.மீ ஆழத்தில் ஏற்படுபவை மேலோட்டமான நிலநடுக்கங்கள்; 70 முதல் 300 கி.மீ ஆழத்தில் ஏற்படுபவை இடைநிலை நிலநடுக்கங்கள் மற்றும் 300 முதல் 700 கி.மீ ஆழத்தில் ஏற்படுபவை ஆழமான நிலநடுக்கங்கள் ஆகும். பொதுவாக, 70 கி.மீ-க்கும் அதிகமான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் "ஆழமான மைய நிலநடுக்கங்கள்" என்று கூறப்படுகிறது.
பிலிப்பின்ஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.