முகப்பு
தற்போதைய செய்திகள்

முழு பலத்தையும் காண்பித்தால்தான் பதவியேற்க முடியுமா?

முழு பலத்தையும் காண்பித்தால்தான் பதவியேற்க முடியுமா? என்பது குறித்து...

தமிழக சட்டப்பேரவை - IANS
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் தரப்பில் கோரப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பு ஆளுநரின் செயலுக்கு பல தரப்பிலும் எதிப்பு எழுந்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக ஆதரவு கோரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது.

Advertisement

இதில், காங்கிரஸ் 5 இடங்களிலும், இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட காங்கிரஸ், தவெகவுக்கு திடீா் ஆதரவு அளித்தது. இதையடுத்து தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை உள்ள நிலையில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து புதன்கிழமை (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டதை அடுத்து விஜய் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இந்த நிலையில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (மே 7) விஜய் மீண்டும் சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பதவியேற்புக்கு முன்னரே, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் கோரப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், பொறுப்பு ஆளுநருக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆளுநருக்கான உரிமை?

ஆளுநா் சுயமாக முடிவெடுக்கலாம்

எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை இருந்தால் அரசியல் சாசனப் பிரிவு 164(1)-இன் கீழ் ஆளுநா் அதன் தலைவரை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து, அவரது ஆலோசனைப்படி அமைச்சரவை சகாக்களையும் நியமிக்க வேண்டும்.

எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாத நிலையில் மட்டுமே ஆளுநா் சுயமாக முடிவெடுக்க முடியும்.

அவகாசம் வழங்க ஆளுநருக்கு உரிமை

அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பாா் என்று ஆளுநா் கருதினால், கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரைப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முதல்வராக நியமிக்கலாம்.

அவா்கள் குறிப்பிட்ட காலவரையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க ஆளுநருக்கு உரிமை உள்ளது.

யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மரபுகள், முன்னுதாரணங்கள், சா்க்காரியா கமிஷன் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சி அல்லது கூட்டணிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், அது குதிரை பேரத்துக்கும், கட்சிப் பிளவுகளுக்கும் வழிகோலுமானால் அதைத் தவிா்க்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.

ஆளுநரின் அடிப்படைக் கடமை நிலையான ஆட்சி அமைக்கப்படுவதுதான். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கும் உரிமையை அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்குகிறது.

சட்டப்பேரவை உறுப்பினா் அல்லாத, எந்தக் கட்சியையும் சாராத ஒருவரால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று ஆளுநா் கருதினால் அவரை முதல்வராக நியமித்து, குறிப்பிட்ட கால அளவில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.

இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுத்தால்தான் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுப்பேன் என்ற பொறுப்பு ஆளுநரின் செயலுக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

ஆளுநரின் உரிமை குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுவதாவது:

ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஆளுநருக்குதான் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் உரிமைகோரும் கட்சியிடம் அதற்கான ஆதரவு பட்டியலை கொடுங்கள் என ஆளுநர் கூறுவதில் தவறில்லை.

அதே நேரத்தில், பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியை, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுத்தால்தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்று ஆளுநர் சொல்ல முடியாது. காரணம் பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் பேரவை என்பதால் பதவியேற்புக்கு அனுமதிக்க வேண்டும்.

ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

ஆதரவை நிரூபிக்க முடியாத நிலையில், பேரவையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.

பேரவையை கலைத்த பின்னர் அதிக நாள்கள் அதனை காலியாக வைத்திருக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உரிமை ஆளுநருக்கு உண்டு என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன்

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள தவெகவை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய நிலையில் இன்னும் பொறுப்பு ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது குழப்பதற்கு இடம் அளிப்பதாக உள்ளது. அறுதி பெரும்பான்மையை பேரவையில் நிரூபிப்பதற்கு விஜய் அனுமதிக்க வேண்டும். அதை செய்யாமல் குழப்பத்தை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.

மக்கள் தீர்ப்பின்படி விஜய் பதவியேற்பதுதான் சரி, அதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். எங்கள் முடிவை முன்கூட்டியே அறிவிக்க முடியாது, பரிசீலித்து அறிவிப்போம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை. இருப்பினும், விஜய்யின் தவெகவுக்கு 108 இடங்களை வழங்கி, தனிப்பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் அவர்களிடம் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுத்தால்தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என பொறுப்பு ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

summary

In the Tamil Nadu Legislative Assembly elections, the TVK emerged as the single largest party, securing victory in 108 constituencies....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.