மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!
கடந்த 2 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது குறித்து...
மேற்காசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்படும் விலை ஏற்ற, இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் புதன்கிழமை (மே 27) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து, பெட்ரோல் - டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்ட நிலையில், மே 15-க்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் நான்காவது முறையாக பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று புதன்கிழமை (மே 27) மீண்டும் சில்லறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ. 108.20 -க்கும், டீசல் லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ. 99.98 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (மே 26), ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 108.01 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 99.78 ஆகவும் இருந்தது.
இதன்படி, பெட்ரோல், டீசல் விலைகள் முதன்முதலில் மே 15 ஆம் தேதி லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டது; அதைத் தொடர்ந்து மே 19 இல் 90 பைசா உயர்த்தப்பட்டது. பின்னர் மே 23 இல் மீண்டும் விலை உயர்த்தப்பட்டது; அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசும், டீசல் விலை 91 காசும் உயர்ந்தன. மே 25 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.61, டீசல் விலை ரூ. 2.71 உயர்த்தப்பட்டது. திங்கள்கிழமை விலை உயர்வுடன் சேர்த்து, மே 15 முதல் இதுவரை ஏற்பட்ட மொத்த விலை உயர்வு பெட்ரோல் லிட்டருக்கு சுமார் ரூ. 7.53, டீசல் லிட்டருக்கு ரூ. 7.70 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்?
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் மற்றும் உலகின் முக்கிய எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, பிப்ரவரி மாத இறுதியில் இருந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன.
இந்தியா வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும்போது அமெரிக்க டாலரில்தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது. தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்திருப்பதால், எண்ணெய் வாங்கும் செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூடுதல் சுமையே தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வாக மக்களிடம் பிரதிபலிக்கிறது.
பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து நுகர்வோரைக் காப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அரசாங்கம் கூறியது. இருப்பினும், முக்கிய மாநிலத் தேர்தல்கள் முடியும் வரை விலை உயர்வை நிர்வாகம் வேண்டுமென்றே நிறுத்தி வைத்திருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் மூன்றில் வெற்றி பெற்று, ஆளும் பாஜக தனது தேர்தல் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய பின்னரே, மே 15 இல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தீர்மானிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கலால் வரி, வாட் உள்ளிட்ட பல்வேறு வரிகள் காரணமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் அதன் முழு பலன் மக்களுக்கு கிடைப்பதில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த செய்தி வந்தாலும், நாட்டில் உடனடியாக எரிபொருள்கள் விலை குறையாது என்ற நிலை நீடித்து வருகிறது.
In yet another way to ease the impact of volatility in the global crude markets amid ongoing geopolitical tensions in West Asia, the petrol and diesel prices were hiked again on Wednesday, May 27
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.