வரும் நாள்களில் தில்லியில் புதிய மேக விதைப்பு சோதனை நடைபெற வாய்ப்பு
அடுத்த சில நாட்களில் தேசிய தலைநகரில் புதிய சுற்று மேக விதைப்பு சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது குறித்து...
புது தில்லி: அடுத்த சில நாட்களில் தேசிய தலைநகரில் புதிய சுற்று மேக விதைப்பு சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஐஐடி கான்பூா் குழு தயாராக உள்ளது என்றும் இந்த நடவடிக்கையுடன் தொடா்புடைய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இருப்பினும், சோதனையின் நேரம் வானிலை நிலவரங்கள், குறிப்பாக மேகங்களில் உள்ள ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்து அமையும் என்று அவா்கள் கூறினா்.
Advertisement
Advertisement
‘நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மேகங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது மட்டுமே எங்களால் சோதனையைச் செய்ய முடியும். வானிலை நிலவரங்கள் சாதகமாக இருந்தால், நாங்கள் உடனடியாக விமானப் பாதையை வரைந்துவிட்டுப் புறப்படுவோம்,‘ என்று இந்த நடவடிக்கையுடன் தொடா்புடைய ஓா் அதிகாரி தெரிவித்தாா்.
இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை, மழையை வரவழைப்பதற்கும், தேசிய தலைநகரின் மாசு நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்குமான ஒரு நடவடிக்கையாக மேக விதைப்பின் திறனை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 அக்டோபா் 28 அன்று, தில்லி அரசு அடுத்தடுத்து இரண்டு மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. அப்போது, நகரின் சில பகுதிகளின் மீது ஒரு சிறிய விமானம் பறக்கவிடப்பட்டு, இரசாயனத் தீப்பொறிகள் மூலம் சில்வா் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு துகள்கள் வெளியிடப்பட்டன.
மேக விதைப்பு என்பது ஒரு வானிலை மாற்றியமைக்கும் நுட்பமாகும். இது, பனிக்கட்டிகள் அல்லது நீா்த்துளிகள் உருவாவதை ஊக்குவிக்கும் நுண்பௌதிக செயல்முறைகளைத் தூண்டுவதற்காக, பொருத்தமான மேகங்களில் சில்வா் அயோடைடு போன்ற பொருட்களைச் செலுத்துவதை உள்ளடக்கியது. இது மழைப்பொழிவை அதிகரிக்கக்கூடும்.
இருப்பினும், முந்தைய சோதனையில் தில்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலேயே அல்லது மழையே பெய்யவில்லை. இதனால், அதன் செயல்திறன் குறித்து நிபுணா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
சமீப நாட்களில், முன்மொழியப்பட்ட மேக விதைப்புப் பயிற்சிக்காக ஐஐடி கான்பூா் ஆய்வுகளையும் சோதனைகளையும் நடத்தி வருவதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியுள்ளாா்.