கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்? சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள்!
உறவுகள் குறித்து சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள் பற்றி...
பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவியும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதா மூர்த்தி ஆகியோர் தொழில்ரீதியான வெற்றிக்கு எப்படி உதாரணமாகச் சொல்லப்படுகிறார்களோ, அதேபோல கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறார்கள். அந்த வகையில் சுதா மூர்த்தி, தனிமனித வாழ்க்கை, உறவுகள், குழந்தைகள் பற்றி பல இடங்களில் பேசியுள்ளார்.
கணவன் - மனைவி உறவில் இருவரும் எப்படி இருக்க வேண்டும் என்று சுதா மூர்த்தி கூறும் 5 முக்கிய விஷயங்கள்...
1. சிறிய ஆதரவு
Advertisement
Advertisement
நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தியின் ஆரம்ப நாள்கள் எளிமையானதாக இல்லை. நாராயண மூர்த்தி தனது நிறுவனத்தைத் தொடங்க விரும்பியபோது அது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அது நிச்சயம் வெற்றிபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பணப் பற்றாக்குறையும் இருந்தது. அந்தத் தருணத்தில்தான் சுதா மூர்த்தி அவருக்கு ஆதரவாக நின்றார். அந்த உறவில் நம்பிக்கை இருந்தது. அதுவே அவரது வெற்றிக்கும் ஒரு காரணம் என்று கூடச் சொல்லலாம்.
இதுபோன்ற விஷயங்கள்தான் உண்மையில் ஒரு உறவை வலுப்படுத்துகின்றன. உறவுகளுக்கு பெரிய வாக்குறுதிகள் தேவையில்லை, கடினமான சூழ்நிலைகளில் உறவுக்கு துணையாக ஆறுதலாக இருந்தாலே போதுமானது. இது அந்த உறவையும் வளர்க்கும்.
2. ஒப்பிட வேண்டாம்
இன்றைய காலகட்டத்தில் உறவுகள் சற்றுச் சிக்கலானவையாகவே இருக்கின்றன. சமூக ஊடகங்கள், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், மற்றவர்களின் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பது என அழுத்தங்கள் நிறைந்து இருக்கின்றன. நாம் சரியாக இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள்.
உண்மையில் நமக்கு எது முக்கியமானதோ அவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மற்ற குடும்பத்தினருடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஆடம்பரங்களும் இன்றி எளிமையான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். குடும்பம், உழைப்பு, நேர்மை, மரியாதை மட்டுமே முக்கியமானது. இப்படி யோசிக்கும்போது உறவுகள் எளிமையானதாக இருக்கும்.
3. சூழ்நிலைகளைக் கையாள்தல்
எந்தவொரு உறவும் முழுமையானதாக சரியாக(perfect) இருப்பதில்லை. மனிதர்களுக்குள் வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இயல்பான ஒன்றுதான். அதில் முக்கியமானது என்னவென்றால், அத்தகைய சூழல்களை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதுதான். சுதா மூர்த்தி எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவர் என்றே அறியப்படுகிறார். மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். அதையும் பொறுமையாக அமைதியாக எடுத்துக் கூறும்போது புரிதல் ஏற்பட்டு நம்பிக்கையை வளர்க்கிறது.
மனதில் உள்ளதைச் சொல்வது, கேட்பது, பிரச்னைகளுக்கு ஒன்றாகச் சேர்ந்து தீர்வு காண்பது என அந்த உறவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். எதையும் அன்புடன் அக்கறையுடன் சொல்லும்போது பிரச்னைகள் வராது.
4. விருப்பங்கள்
நீங்களும் உங்கள் துணைக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கலாம். உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை, நம்பிக்கை, உழைப்பு, வளர்ச்சி, கல்வி, பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஒரேமாதிரியான எண்ணத்துடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம். வளர்ச்சிக்கான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இருவரும் ஒரே திசையில் ஒரேமாதிரியான எண்ணத்தில் பயணிக்க வேண்டும்.
5. இயல்புடன் இருக்க அனுமதிப்பது
எந்தவொரு உறவிலும் அன்பு, காதல் இருப்பதுபோல துணையை அவரது இயல்புடன் இருக்க அனுமதிப்பது முக்கியமானதாகும். அதேபோல ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதும் அவசியமாகும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவது. முக்கியமான நேரத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது என சில நேரங்களில் அமைதியான, நிலையான ஆரவாரமில்லாத உறவுகள்தான் மிக முக்கியமானவை.
Sudha Murty advises for successful husband and wife relationships
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.