FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நீரிழிவால் பார்வை இழக்கும் ஆபத்து! தற்காத்துக்கொள்வது எப்படி?

நீரிழிவால் ஏற்படும் கண் தொடர்பான பிரச்னைகள் பற்றி...

Updated On : 24 ஜூலை 2026, 5:03 pm IST
கோப்புப் படம் - DNS
பகிர்:

- அன்னா ஜோஸ்

நீரிழிவு உள்ளவர்கள், கண் பார்வை தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க, தொடர்ச்சியாக கண் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரை அணுக வேண்டும், பார்வை பரிசோதிக்கப்பட்டு இயல்பான நிலையில் இருந்தால் ஓராண்டுக்குப் பிறகு பரிசோதனை செய்துகொள்ளலாம், பார்வையில் மாற்றங்கள் இருந்தால் தொடர்ச்சியாக அல்லது 3 -6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேரளம் அப்போலோ மருத்துவமனை கண் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுபா குரியன் கூறுகிறார்.

Advertisement

Advertisement

மேலும் பெருக்க நீரிழிவு விழித்திரை நோய் (proliferative diabetic retinopathy) மற்றும் நீரிழிவு விழித்திரை வீக்கம் (diabetic macular edema) போன்ற கடுமையான பாதிப்புகள் பார்வை இழப்புக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

ரத்தத்தில் அதிகமாக அல்லது ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் குளுக்கோஸ், கண்களின் பின்புறத்தில் உள்ள ரத்த நாளங்களைச் சேதப்படுத்தலாம். ரத்த குளுக்கோஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும்போது நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இந்த பிரச்னை தொடங்கலாம். ஆனால், அப்போது நீரிழிவு இருப்பது தெரியாது. நீரிழிவு உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு விழித்திரை நோயின் சில அறிகுறிகள் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றத்தில் குளுக்கோஸ் மிக முக்கியமானது, இது செல்களுக்கான ஆற்றலின் முதன்மை ஆதாரமாகும். இருப்பினும், உடல் அதைப் பயன்படுத்திக் கொள்ள குளுக்கோஸ் அளவுகள் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலின் சரியாகச் செயல்படாதபோது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குளுக்கோஸ் நேரடியாக ரத்தத்தில் சேர்வதால், ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து உயர்வாகவே இருக்கிறது.

கோழிக்கோடு டாக்டர் சுரேஷ் டயாப்கேர் இந்தியா மருத்துவமனையின் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் சுரேஷ் குமார் இதுபற்றி விளக்கமளிக்கையில்,

"இந்த ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, ​​உடல் முழுவதும் உள்ள திசுக்கள், கட்டமைப்புப் புரதங்களைச் சேதப்படுத்தி பிற உறுப்புகளையும் பாதிக்கிறது. கண்களில் விழித்திரையில் உள்ள சிறிய ரத்த நாளங்களின் உள்புறப் படலமான 'எண்டோதீலியத்தை' (endothelium) சேதப்படுத்துகிறது. இதனால் இந்த ரத்த நாளங்கள் அடைபட்டு விழித்திரைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு தடைபடுகிறது. தொடர்ந்து 'நியோவாஸ்குலரைசேஷன்' (neovascularisation) எனும் அசாதாரணமான பலவீனமான புதிய ரத்த நாளங்கள் உருவாகிறது. இவற்றில் இருந்து ரத்தம் மற்றும் புரதம் கசிந்து விழித்திரையில் ரத்தப்போக்கு மற்றும் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இது தீவிரமடையும் போது திசுக்கள் வடுவாக மாறி (scar tissue) விழித்திரையை இழுக்கக் கூடும், இது விழித்திரை விலகலுக்கு வழிவகுக்கும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான அல்லது நிரந்தரமான பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்" என்றார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கண் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருவதாக கூறும் டாக்டர் சுபா குரியன், 10 ஆண்டுகளுக்கு இதே நிலையுடன் ஒருவர் இருந்தால் மோசமான விளைவுகள் இருக்கும் என்றும் அதிலும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையென்றால் இந்த விழித்திரை பாதிப்பு நோய் மூலமாக பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார். அதுமட்டுமின்றி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு தொடர்பான பிற கண் நோய்கள் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

"நீரிழிவு உள்ளவர்கள் பெரும்பாலும் குளுக்கோஸ் அளவை மட்டுமே கவனிக்கின்றனர். அவர்களது கண், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றைக் கவனிப்பதில்லை. மற்றொரு மிகப்பெரிய தவறு, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பாதிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறார்கள். இவர்கள் அனைவருமே கண் பரிசோதனை மேற்கொள்வதைத் தவறவிடுகிறார்கள். கண் பாதிப்பை மிகவும் தாமதமாகவே உணர்கிறார்கள். இந்தியாவில் நீரிழிவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 40% பேர்கூட தங்கள் விழித்திரையைப் பரிசோதித்துக் கொள்வதில்லை என்று ஒரு ஆய்வு காட்டுகிறது" என்று கேரள நீரிழிவு நோய் ஆய்வு நிபுணர் டாக்டர் ஜோதிதேவ் கேசவதேவ் தெரிவித்தார்.

நீரிழிவு தொடர்பான கண் நோய்களைக் கட்டுப்படுத்தவும் அவை தீவிரமடைவதைத் தடுக்கவும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

"பெரும்பாலான மக்கள் தங்கள் 40 மற்றும் 50-களில்தான் உடல்நலத்தையும் ரத்தச் சர்க்கரை அளவையும் பராமரிக்க முற்படுகிறார்கள். ஆனால், குழந்தைப் பருவத்தில் கடைப்பிடிக்கப்படும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுக்கள் அல்லது நார்ச்சத்து போன்ற எந்தவொரு கூடுதல் சத்துக்களும் இல்லை. அது வெறும் கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே, அதைத் தவிர்ப்பதே சிறந்தது. குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதிப்புக்கான வரலாறு இருந்தாலும்கூட, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் இந்நோய் வருவதைத் தள்ளிப்போட முடியும்" என்று கூறினார்.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Diabetic patients can lose their vision: How can you protect yourself

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments