FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிராமப்புற மருத்துவ உரிமை

உலக வங்கி மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள்தொகையில் சுமார் 64 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

- சித்திரிப்பு
பகிர்:

உலக வங்கி மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள்தொகையில் சுமார் 64 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

எனவே, இந்திய சுகாதார அமைப்பின் வலிமையை அளவிட பெருநகரங்களில் உள்ள உயர்தர மருத்துவமனைகள் வழங்கும் மருத்துவ வசதிகளை மட்டுமன்றி கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளையும், அவை நோயாளிகளுக்கு எவ்வளவு விரைவாகவும், தரமாகவும், பாதுகாப்பாகவும் மருத்துவ சேவை வழங்குகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பு இந்திய சுகாதாரக் கொள்கையின் மையமாக இருக்க வேண்டும். 2023-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்திய சமூக சுகாதார நிலையங்களில் அறுவைச் சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலன், குழந்தைகள் நலன் உள்ளிட்ட துறைகளில் 21,964 சிறப்பு மருத்துவர்கள் தேவைப்பட்ட நிலையில், 4,413 பேர் மட்டுமே பணியில் இருந்தனர்; அதாவது, தேவையில் சுமார் 80 சதவீதம் பற்றாக்குறை இருந்தது.

Advertisement

Advertisement

அறுவைச் சிகிச்சை நிபுணர் நோயாளிக்கு சிகிச்சை வழங்க மயக்க மருத்துவர், பயிற்சி பெற்ற செவிலியர்கள், தேவையான அறுவைச் சிகிச்சைக் கருவிகள், ஆய்வக வசதிகள், குருதி கிடைப்பதை உறுதி செய்யும் ஏற்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை அவசியம்.

உயிருக்கு ஆபத்தான அதிகப்படியான குருதிப்போக்கை எதிர்கொள்ளும் மகப்பேறு மருத்துவருக்கு மயக்க மருத்துவர் உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் தேவையான மருந்துகள், குருதி, அவசர அறுவைச் சிகிச்சைக்கூட வசதி தேவை.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, செயற்கை சுவாச வசதி, தொடர் கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு பயிற்சி பெற்ற செவிலியர்களுடன் இணைந்தால் மட்டுமே ஒரு குழந்தைகள் நல மருத்துவர் தீவிரமாக நோயுற்ற பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பைத் திட்டமிடும்போது மருத்துவர்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், செவிலியர், மருந்தாளர், ஆய்வகத் தொழில்நுட்புநர், கதிரியக்கத் தொழில்நுட்புநர், அவசர சிகிச்சைப் பணியாளர் உள்ளிட்ட மருத்துவக் குழுவையும், அவர்கள் திறம்படப் பணியாற்றத் தேவையான கருவிகள் உள்ளிட்ட பிற வசதிகளையும் ஒருங்கிணைத்தே மதிப்பிட வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் 2024-ஆம் ஆண்டு வெளியான ஹெல்த் டைனமிக்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, நாட்டில் 1,69,615 துணை சுகாதார நிலையங்களும், 31,882 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 6,359 சமூக சுகாதார நிலையங்களும் இருந்தன. தேவையுடன் ஒப்பிடும்போது நாட்டில் 22% துணை சுகாதார நிலையங்கள், 30% ஆரம்ப சுகாதார நிலையங்கள், 36% சமூக சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறை இருப்பதாக ஒரு நாடாளுமன்ற ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தப் பற்றாக்குறை என்பது கட்டட வசதியில் மட்டும் இல்லை; மனிதவளம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் இருப்பு, நோயறிதல் வசதிகள், அவசர சிகிச்சை, செயல்பாட்டுத் திறன், உயர் மருத்துவச் சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பு என மருத்துவக் கட்டமைப்பின் பல்வேறு கூறுகளிலும் காணப்படுகிறது.

ரத்தப் பரிசோதனை, உயிரிவேதியியல் பரிசோதனை, கதிரியக்கப் பரிசோதனை, மீயொலி வரைவுப் பரிசோதனை (அல்ட்ரா சோனோகிராபி) போன்ற நோயறிதல் வசதிகளுக்காக நோயாளிகள் நகரங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டால், கிராமப்புற மருத்துவமனை ஒரு முழுமையான மருத்துவ நிறுவனமாகச் செயல்பட முடியாது.

மாரடைப்பு, பக்கவாதம், விபத்து, குருதிப்போக்கு, மகப்பேறு தொடர்பான அவசரநிலை போன்ற உயிருக்கு ஆபத்தான நேரங்களில், தாமதமின்றி சிகிச்சையைத் தொடங்குவதே உயிரைக் காப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும். அவசர சிகிச்சைப் பிரிவு, உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள், திறன் பெற்ற மருத்துவப் பணியாளர்கள், தடையின்றி இயங்கும் அவசர ஊர்திச் சேவை, மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை உரிய மருத்துவமனைக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பும் பரிந்துரை அமைப்பு ஆகியவை தனித்தனியாகச் செயல்படக் கூடாது.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே அவசர மருத்துவக் கட்டமைப்பின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

தொலைமருத்துவம் மூலம் கட்டமைப்பு இடைவெளியைக் கணிசமாகக் குறைக்க முடியும். கிராமப்புற மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறும் வகையில் மின்னணு மருத்துவப் பதிவுகள், தொலைநோயறிதல், காணொலி மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும்.

கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், குடும்பத்துடன் வாழ்வதற்கான வசதிகள், பாதுகாப்பான பணிச்சூழல், போதிய ஓய்வு, தொடர் கற்றல் வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் உரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும்.

துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், சமூக சுகாதார நிலையம், துணை மாவட்ட மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை என ஒவ்வொரு நிலையத்திலும் இருக்க வேண்டிய, மருத்துவ சேவைகள், பணியாளர்கள், கருவிகள், பிற சுகாதார கட்டமைப்பு வசதிகளுக்கான தரநிலைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய பொது சுகாதாரத் தரநிலை வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.

கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பு செயல்திறனை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக இந்தத் தரநிலைகள் பயன்படுத்தப்பட வேண்டும். கிராமப்புற மக்களின் மருத்துவ உரிமையை உறுதி செய்ய, மருத்துவரை மட்டும் உருவாக்குவது போதாது; அவர் திறம்படப் பணியாற்றுவதற்குத் தேவையான வலுவான மருத்துவ நிறுவனத்தையும் உருவாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments