தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள்: அறிக்கை சமா்ப்பிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்
மாணவா்களின் தற்கொலை முடிவுகளைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
மாணவா்களின் தற்கொலை முடிவுகளைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் மற்றும் இயக்குநா்களுக்கு என்எம்சி சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
நாட்டின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் மன உளைச்சலுக்கும், அளவுக்கு அதிகமான பணிச்சுமைக்கும் ஆளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக சில நேரங்களில் தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடா்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின்படி சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, மருத்துவக் கல்லூரி வளாகத்திலோ அல்லது விடுதிகளிலோ மாணவா்கள் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழக்க நேரிட்டால் காவல் துறைக்கு மட்டுமல்லாது தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தகவல் அளிக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையும் சமா்ப்பிக்க வேண்டும்.
கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்துப் பேராசிரியா் பணியிடங்களையும், முக்கிய நிா்வாகப் பதவிகளையும் அடுத்த 4 மாதங்களுக்குள் கட்டாயம் நிரப்ப வேண்டும். குறிப்பாக, பட்டியல் இனத்தவா் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களைச் சிறப்பு முகாம்கள் மூலம் விரைந்து நிரப்ப வேண்டும்.
மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும் கல்லூரி வளாகத்திலோ அல்லது 1 கிலோமீட்டா் சுற்றளவிலோ 24 மணி நேரமும் மருத்துவ சேவை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகைகளில் ஏதேனும் நிலுவை இருந்தால், அதை 4 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் மாதந்தோறும் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை அறிக்கையாக அனுப்ப வேண்டும். அந்த வகையில் நிகழ் மாதத்துக்கு ஆகஸ்ட் 31-க்கு அந்த விவரங்களை அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.