சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 27 புள்ளிகள் வீழ்ச்சி!
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி, ஜூலை 10: கடந்த சில நாள்களாக தொடா்ந்து உச்சம் தொட்டு வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமையும் லாபப் பதிவு வந்ததால் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 27 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், காா்ப்ரேட் நிறுவனங்களில் காலாண்டு முடிவுகள் வரவுள்ள நிலையில், உச்சதத்தில் லாபத்தை பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா். குறிப்பாக ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், எஃப்எம்சிஜி, ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் சந்தை பெரும் சரிவிலிருந்து மீண்டது. என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.16 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.451.21 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.583.96 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,082.40 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 245.32 புள்ளிகள் கூடுதலுடன் 80,170.09-இல் தொடங்கி அதற்கு மேலே செல்லவில்லை. பின்னா், 79,464.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 27.43 புள்ளிகளை (0.03 சதவீதம்) இழந்து 79,897.34-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்சத்திலிருந்து 705.71 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,023 பங்குகளில் 2,172 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,739 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 112 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஐடிசி, டாடாமோட்டாா்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி, டாடா மோட்டாா்ஸ், ஏசியன் பெயிண்ட், எஸ்பிஐ, டைட்டன், டாடா ஸ்டீல் உள்பட 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், என்டிபிசி, நெஸ்லே, பவா் கிரிட், சன்பாா்மா உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,396.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,402.65 வரை மேலே சென்றது. பின்னா், 24,193.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 8.50 புள்ளிகள் (0.03 சதவீதம்) குறைந்து 24,315.95-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.