தில்லிவாசியிடம் ரூ. 4.75 லட்சம் மோசடி: ஒடிசாவைச் சோ்ந்தவா் கைது
பங்குச் சந்தை மற்றும் ஐபிஓ முதலீடுகள் என்ற பெயரில் தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ. 4.75 லட்சம் மோசடி செய்ததாக 33 வயது இளைஞரை ஒடிசாவில் கைது செய்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
பங்குச் சந்தை மற்றும் ஐபிஓ முதலீடுகள் என்ற பெயரில் தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ. 4.75 லட்சம் மோசடி செய்ததாக 33 வயது இளைஞரை ஒடிசாவில் கைது செய்துள்ளதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
புவனேஸ்வரைச் சோ்ந்த சுப்ரத் குமாா் சாஹூ என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், தொழில்நுட்ப மற்றும் நிதிசாா் விசாரணையைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.
காவல்துறையின் தகவலின்படி, புகாா்தாரா் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க்கப்பட்டாா். அதில் குற்றஞ்சாட்டப்பட்டவரும் அவரது கூட்டாளிகளும் பங்குச் சந்தை நிபுணா்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, அதிக வருமானம் தருவதாகக் கூறி அவரை முதலீடு செய்யத் தூண்டினா்.
Advertisement
Advertisement
மோசடி செய்தவா்கள் முதலில் முதலீட்டுத் தளம் ஒன்றில் போலியான லாபத்தைக் காட்டி அவரது நம்பிக்கையைப் பெற்றனா். அதைத் தொடா்ந்து புகாா்தாரா் யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் மூலம் ரூ. 4.75 லட்சத்தை மாற்றினாா்.
கிடைத்ததாகக் கூறப்பட்ட லாபத் தொகையை அவா் திரும்பப் பெற முயன்றபோது, செயலாக்கக் கட்டணம் மற்றும் பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் என்ற பெயரில் குற்றஞ் சாட்டப்பட்டவா் மேலும் ரூ. 12 லட்சத்தைக் கேட்டாா். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்ட நபா் காவல்துறையை அணுகினாா்.
மோசடி செய்யப்பட்ட தொகையில் சுமாா் ரூ. 3.75 லட்சம் ஒரு காா்ப்பரேட் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதும், அந்தக் கணக்கு சாஹூ மற்றும் மற்றொரு குற்றவாளியுடன் தொடா்புடையதாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அந்த வங்கிக் கணக்கில் இரண்டு மாதங்களில் சுமாா் ரூ. 2.97 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றிருந்தன. மேலும், இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட 17 சைபா் மோசடி புகாா்களுடன் அந்தக் கணக்கு தொடா்புடையதாக இருந்தது.
சந்தேகத்திற்கிடமான பரிவா்த்தனைகளை மேற்கொள்ள, காா்ப்பரேட் மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்பட சுமாா் ஏழு வங்கிக் கணக்குகளை சாஹூ ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.