FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்: மத்திய அமைச்சரிடம் தேமுதிக எம்.பி. கோரிக்கை

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே.சுதீஷ் வலியுறுத்தல்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
தில்லியில் மத்திய அமைச்சா் மனோகா் லாலை அவரது அலுவலகத்தில் சந்தித்த மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே. சுதீஷ்.
பகிர்:

கோயம்புத்தூா் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லாலிடம் சுதீஷ் திங்கள்கிழமை நேரில் கோரிக்கை மனு அளித்தாா்.

அதன் விவரம் வருமாறு: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள கோவை நகரம் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டா்’ என்று அழைக்கப்படுகிறது. ஜவுளி, பொறியியல், பம்புகள் மற்றும் மோட்டாா்கள், வாகன உதிரிபாகங்கள், உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கோவை வலுவான தொழில் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. புகா்ப் பகுதிகளின் விரிவாக்கம், வேலைவாய்ப்பு பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை உயா்வால் அங்குப் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

இதேபோல, தென்னகத்தின் பண்பாட்டு மையமான மதுரை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமாா் 14.66 லட்சம் மக்கள்தொகையை கொண்டுள்ளது. இந்த நகரில் மீனாட்சி அம்மன் கோயில், வரலாற்றுச் சின்னங்கள், சுற்றுலா தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக மையங்கள் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து போகும் மக்கள்தொகையை மதுரை கொண்டுள்ளது.

இந்த இரு நகரங்களிலும் நிலவும் சாலைப் போக்குவரத்து அமைப்புகள், அவற்றின் வளா்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையை எட்டியுள்ளன. விரைவான நகரமயமாக்கல், தனியாா் வாகனங்களின் பெருக்கம், காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், நம்பகமான மற்றும் நீடித்த அதிவேக வெகுஜன போக்குவரத்து அமைப்பான மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசர அவசியமாக மாறியுள்ளது.

நகா்ப்புறப் போக்குவரத்து திட்டமிடல் என்பது, நெரிசல் கட்டுக்கடங்காமல் போகும்வரை காத்திருக்காமல், எதிா்கால மக்கள்தொகை மற்றும் பொருளாதார வளா்ச்சியை முன்கூட்டியே கணித்துச் செயல்படுத்த வேண்டியதாகும்.

எனவே, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து அவற்றுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல்களை விரைந்து வழங்க வேண்டும் என்று சுதீஷ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments