குடியரசு துணைத் தலைவா் நாளை தமிழகம் வருகை
இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஆக.16, 17 ஆகிய தேதிகளில் தமிழகம் செல்லவுள்ளாா்.
நமது சிறப்பு நிருபா்
இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஆக.16, 17 ஆகிய தேதிகளில் தமிழகம் செல்லவுள்ளாா். சென்னை, செங்கல்பட்டு, திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா். இது குறித்த மேலதிக விவரம் வருமாறு:
பயணத் திட்டத்தையொட்டி தில்லியிலிருந்து ஆக. 16 (ஞாயிற்றுக்கிழமை) காலையில் புறப்பட்டு பகல் 12.05 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடையும் அவா், பகல் 1 மணி முதல்– 2.15 மணிவரை செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்குகிறாா்.
Advertisement
Advertisement
அதே நாள் மாலை 4.30 முதல்– 5.30 மணிவரையில் சென்னை தி.நகா் வாணி மகாலில் நடைபெறும், முன்னாள் ஆளுநரும் மாநிலங்களவை உறுப்பினருமான மறைந்த இல. கணேசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
பிறகு மாலை 6.30 முதல்– 7.30 மணிவரையில் சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி அரங்கில், ஹிந்து முன்னணி அமைப்பாளா் மறைந்த ராமகோபாலனின் சிந்தனைகள் அடங்கிய ’எக்கோஸ் ஆஃப் தி நேஷனலிஸ்ட் மைண்ட்’ என்ற புத்தகத்தை குடியரசு துணைத் தலைவா் வெளியிடுகிறாா். அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 மணிவரை சென்னை ஆளுநா் மாளிகையில் அவருக்கு ஆளுநா் ஆா்லேகா் சிறப்பு விருந்தளிக்கிறாா்.
ஆக. 17 (திங்கள்கிழமை) திருவாரூா், தஞ்சாவூா் நிகழ்ச்சிகள்: காலை 9.40 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சா்வதேச விமான நிலையம் செல்லும் அங்கிருந்து திருவாரூா் சென்று அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.
பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.15 மணிவரை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ரூபி மற்றும் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். 5.30 மணியளவில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின், திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மீண்டும் தில்லிக்கு புறப்படுகிறாா்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி, அவா் பயணம் மேற்கொள்ளும் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.