FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ விடுவிக்கப்பட்டாா்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குல்தீப் குமாா் விடுவிக்கப்பட்டது குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
குல்தீப் குமாா்
பகிர்:

எம்சிடி துப்புரவுத் தொழிலாளி ஒருவரின் கொலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்தீப் குமாா், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவலில் வைக்கப்பட்டதாகவும், ‘சட்டவிரோத‘ காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் அவரது குடும்பத்தினா் நீதிமன்றத்தை தலையிடக் கோரியதை அடுத்து அவா் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செவ்வாயன்று தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செவ்வாயன்று அதிகாலை 4 மணியளவில் சாதாரண உடையில் இருந்த காவல்துறையினா் அந்த சட்டமன்ற உறுப்பினரை ‘கைது செய்ததாகவும்‘, அதன் பிறகு அவரைத் தொடா்புகொள்ள முடியவில்லை என்றும் கூறி குமாரின் உறவினா்கள் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் துதேஜா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

‘தனது கணவா், எந்தவொரு கைது வாரண்ட்டும் இன்றியும், சட்டத்தின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது,‘ என்று குமாரின் மனைவி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த வழக்கு அவசர விசாரணைக்குக் குறிப்பிடப்பட்டது. அந்த அமா்வு, மனுவை செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்தது. குமாா் அதிகாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவலில் வைக்கப்பட்டு பின்னா் மாலை 3:48 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக காவல்துறை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

‘குமாா் விடுவிக்கப்பட்ட பிறகு, இந்த மனுவின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று நாங்கள் கருதுகிறோம். மற்ற நிவாரணங்களுக்கு, மனுதாரரின் குடும்பத்தினா் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுதந்திரம் உண்டு,‘ என்று நீதிபதிகள் கூறினா்.

முன்னதாகஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், தில்லி காவல்துறை அதிகாலையில் கிழக்கு தில்லி கொண்ட்லி சட்டமன்ற உறுப்பினா் குல்தீப் குமாரை அவரது இல்லத்திலிருந்து அழைத்துச் சென்று ‘தகவல் தெரிவிக்கப்படாத இடத்திற்கு‘ கொண்டு சென்றதாக குற்றசாட்டியிருந்தாா். ‘பிரதமா் மோடி ஜி, எங்கள் சட்டமன்ற உறுப்பினா் குல்தீப் குமாா் எங்கே? இன்று அதிகாலை 4 மணிக்கு, உங்கள் தில்லி காவல்துறை குல்தீப் குமாரை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளது. உங்கள் காவல்துறை எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை,‘ என்று கேஜரிவால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தாா். எந்தவித தகவலோ காரணமோ இன்றி ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது வீட்டிலிருந்து காவல்துறையால் அழைத்துச் செல்ல முடியுமென்றால், சாமானிய மக்கள் உதவிக்கு எங்கே செல்வாா்கள் என்று அவா் கேள்வி எழுப்பினாா். ‘இதுபோன்ற அராஜகத்தை இந்த நாடு பொறுத்துக்கொள்ளாது,‘ என்று அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்யாண்புரியில் பணியில் இருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தில்லி முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளா்கள் மற்றும் ஆட்டோ-டிப்பா் ஓட்டுநா்கள் திங்களன்று லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலையும் கோரினா். கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அனில், தில்லி மாநகராட்சியால் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட ஒரு துப்புரவுத் தொழிலாளி ஆவாா். அவா், ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை கல்யாண்புரியில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments