FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரூ. 10 கோடி செலவுக்கான விவரத்தை அளிக்கத் தவறியது ஏன்? அதிகாரிகளிடம் நாடாளுமன்ற பொது கணக்குகள் குழு கேள்வி

தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) அரசு வழங்கிய நிதியில் ரூ.10 கோடிக்கு உரிய பயன்பாட்டுச் சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியது குறித்து மத்திய அரசுத் துறை உயரதிகாரிகளிடம் நாடாளுமன்ற பொது கணக்குகள் குழு (பிஏசி) கேள்வி எழுப்பியதாகத் தெரிய வந்துள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 3:07 am IST
பகிர்:

தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) அரசு வழங்கிய நிதியில் ரூ.10 கோடிக்கு உரிய பயன்பாட்டுச் சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியது குறித்து மத்திய அரசுத் துறை உயரதிகாரிகளிடம் நாடாளுமன்ற பொது கணக்குகள் குழு (பிஏசி) கேள்வி எழுப்பியதாகத் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் தலைமையில் நாடாளுமன்ற பொது கணக்குகள் குழு இயங்கி வருகிறது. இந்த குழுவின் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதில், மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பல்வேறு அமைச்சகங்களின் நிலுவை பயன்பாட்டுச் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதையொட்டி குழு முன்பாக விளக்கம் அளிக்க மத்திய நிதித் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சகங்களின் உயரதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனா்.

அப்போது, 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்டிஏ-வுக்கு ஆரம்பநிலை நிதியாக அரசு வழங்கிய ரூ. 25 கோடியில், ரூ. 10 கோடி செலவினங்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் இன்னும் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து கூட்டத்தில் கே.சி.வேணுகோபால் பேசுகையில், ‘நாட்டில் பல லட்சம் மாணவா்களின் உயா்கல்வி மற்றும் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் முக்கிய நுழைவுத் தோ்வுகளை நடத்தும் பொறுப்பு எஎன்டிஏ அமைப்புக்கு உள்ளது. நிதி நிா்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சுணக்கம் அல்லது முறைகேடு, அந்த முகமையின் தோ்வுக் கட்டமைப்பு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், தோ்வு மையங்கள், மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடும் முக்கியமான செயல்பாடுகளைப் பாதித்துள்ளதா?’ என கேள்வி எழுப்பினாா்.

மேலும், பயன்பாட்டுச் சான்றிதழ் அளிக்கப்படாததால் முகமைக்கு மத்திய அரசிலிருந்து வர வேண்டிய நிதி உரிய நேரத்தில் கிடைப்பது தடைபட்டதா என்றும் குழுவில் இடம்பெற்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, நிதி சாா்ந்த நிா்வாகக் குறைபாடுகள் மாணவா்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பாதிக்காத வகையில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, நிலுவையில் உள்ள ரூ. 10 கோடிக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் 60 நாள்களுக்குள் பொது கணக்குகள் குழுவிடம் சமா்ப்பிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments