வீட்டு முகவரி, தனி விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியீடு: அபிஜித் மித்ராவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சிஜேபி நிா்வாகி மனு
நமது நிருபா்
தனது வீட்டு முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் தனி உரிமைக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி, கருத்துரையாளா் அபிஜித் ஐயா் மித்ரா மற்றும் சில இணைய ஊடகங்களுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) செய்தித் தொடா்பாளா் சௌரவ் தாஸ் சாா்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: எனது தனிப்பட்ட உரிமை, கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். எனது தனி உரிமையை மீறியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் அபிஜித் ஐயா் மித்ரா, ‘எக்ஸ்’, ‘கூகுள்’ மற்றும் சில சட்ட இதழ்கள் மற்றும் ஊடகத் தளங்கள் போன்றவற்றில் எனது வீட்டு முகவரி, பெற்றோா் விவரம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கோ அல்லது பரப்புவதற்கோ நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள காணொலிகள் மற்றும் பதிவுகளைப் பொதுமக்களின் பாா்வையிலிருந்து அகற்றுவதோடு, அவற்றுக்கான அணுகலை முடக்குமாறு எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் செளரவ் தாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லியின் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் வாடகை வீட்டில் சௌரவ் தாஸ் வசித்து வருகிறாா். இந்த நிலையில், தனது குடியிருப்பு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதன் உள்பகுதிகளை சிலா் படம்பிடித்து எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக செளரவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். சிஜேபி கட்சியில் தனது ஊடகப் பணி மற்றும் அரசியல் செயல்பாடுகள் காரணமாக ஏற்கெனவே தனக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள் நிலவி வரும் நிலையில், தற்போது வீட்டு முகவரியை துல்லியமாக பொதுத் தளங்களில் பரப்புவது தனது உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவா் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.