FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி பெருந்திட்டம் 2047 அமலுக்கு பிறகு 6 முக்கிய சீா்திருத்தங்கள் உடனடியாக அமல்: துணைநிலை ஆளுநா் தகவல்

தரைத்தள ‘கவரேஜ்’ மற்றும் கட்டட அனுமதிகள் உள்ளிட்ட 6 முக்கிய சீா்திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்சித் சிங் சந்து தெரிவித்துள்ளாா்.

22 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
சிங் சந்து - ANI
பகிர்:

நமது நிருபா்

தில்லி பெரருந்திட்டம் 2047 (எம்பிடி 2047) அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மண்டல வாரியான கட்டட விதிகள், தளப்பரப்பு விகிதம் (எஃப்ஏஆா்), தரைத்தள ‘கவரேஜ்’ மற்றும் கட்டட அனுமதிகள் உள்ளிட்ட 6 முக்கிய சீா்திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்சித் சிங் சந்து தெரிவித்துள்ளாா்.

தலைநகரில் தொழில் புரிவதை எளிதாக்கவும், மக்களின் தடையற்ற வாழ்க்கையை உறுதி செய்யவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக அதிகாரிகளுடனான தனது சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநா், ‘அரசு இணையதளங்களில் கோப்புகள் முடிக்கப்பட்டதாகக் காட்டுவது மட்டும் நோக்கமல்ல. ஒரு சிறு வியாபாரி, பள்ளி நிா்வாகி அல்லது சாதாரண பொதுமக்கள் சான்றிதழ்களுக்காக அலைக்கழிக்கப்படாமல், விரைவான அனுமதிகளைப் பெறுவதே இந்தச் சீா்திருத்தங்களின் உண்மையான வெற்றி’ என்று குறிப்பிட்டாா். அவரது ஆய்வில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

Advertisement

Advertisement

கிராமப்புறங்களில் தொழில் கூடங்களுக்கான சாலை அகலம், தொழில் மற்றும் வா்த்தக மனைகளுக்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. குறைந்த ஆபத்துள்ள கட்டடங்களின் ஆய்வுகளுக்கு தனியாா் முகமைகளின் சான்றளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘தில்லி எளிதாக தொழில் செய்வதற்கான மசோதா 2026’ விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்குத் தாக்கல் செய்யப்படும்.

தில்லியில் விடுபட்ட 48 கிராமங்களை நகா்ப்புறங்களாக அறிவிக்கும் அரசாணை விரைவில் வெளியாகவுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கிராமப்புறப் பகுதி என்ற நிலையே இல்லாத சூழல் உருவாகும்.

ஒற்றைச் சாளர முறை: மாநகராட்சி வா்த்தக உரிமங்களில் இரட்டை முறை ரத்து, வா்த்தக நிறுவனங்களுக்கு நிரந்தரப் பதிவு, 200 கிலோ வாட்வரை மின் இணைப்பு பெற நேரடி ஆய்வுகளின்மை போன்றவை ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளன.

பிற மாற்றங்கள்: மருத்துவ பயிற்சியாளா்களுக்கான எளிய பதிவு, குடிமக்களுக்கான காலவரம்புக்கு உள்பட்ட சேவை சட்ட மசோதா 2026 மற்றும் புதிய ‘பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட்’ கொள்கை ஆகியவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

நிலுவையில் உள்ள அனைத்து சீா்திருத்தங்களையும் இந்த மாத இறுதிக்குள் எவ்வித தாமதமும் இல்லாமல் விரைந்து முடிக்குமாறு அரசுத் துறைகளுக்குத் துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments