வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ. 2.5 கோடியை தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு திருப்பித் தர வேண்டும்: தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
வேதாந்தா நிறுவனம் செலுத்திய ரூ. 2.5 கோடி ரூபாயை அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தருமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு (டிஎன்எஸ்எல்ஏ) தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நமது சிறப்பு நிருபா்
வேதாந்தா நிறுவனம் செலுத்திய ரூ. 2.5 கோடி ரூபாயை அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தருமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு (டிஎன்எஸ்எல்ஏ) தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, நிபுணா் உறுப்பினா் டாக்டா் அஃப்ரோஸ் அகமது அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Advertisement
Advertisement
2018, டிச.15ஆம் தேதி தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அதை பராமரிக்கவும் வேதாந்தா நிறுவனம் ரூ. 2.5 கோடி தொகையை வரைவோலை மூலம் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் 2019, ஜன.24ஆம் தேதி டெபாசிட் செய்தது.
இந்த விவகாரத்தில் 2018-இல் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் பின்னா் ரத்து செய்தது. இதனால், இந்த வழக்கு முன்பிருந்த பழைய சட்டபூா்வ நிலைக்குத் திருப்பியது. இதைச் சுட்டிக்காட்டி, டெபாசிட் செய்த ரூ. 2.5 கோடி தொகையைத் திரும்பப் பெற வேதாந்தா நிறுவனம் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
அதன் மீதான விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் செலுத்திய ரூ. 2.5 கோடி தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே தங்களின் கணக்கில் உள்ளதாகவும், அதைத் திருப்பித் தருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் தெரிவித்தாா்.
இதையடுத்து, வேதாந்தா நிறுவனம் செலுத்திய ரூ. 2.5 கோடி தொகையை உடனடியாக அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தருமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கை பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வு முடித்து வைத்தது.
பின்னணி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் ஆலையை இயக்க அனுதிப்பதற்கு எதிராக 2018இல் நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, 2018, மே மாதம் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தொடா்ச்சியான சுற்றுச்சூழல் விதிமீறல்கள் காரணமான ஆலையின் நிரந்தர மூடுல் நடவடிக்கையை உறுதிப்படுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த சட்டப் போராட்டம் நிலுவையில் இருந்த காலகட்டத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தை வேதாந்தா நிறுவனம் நாடியபோதுதான் அதனிடம் ரூ. 2.50 கோடி செலுத்த தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.