FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நாட்டுக்கோழி வளா்ப்பு நிறுவனம் நடத்தி ரூ. 24.54 கோடி மோசடி: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நாட்டுக்கோழி வளா்ப்பு நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களிடம் ரூ.24.54 கோடி மோசடி செய்த வழக்கில், அதன் உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

3 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நாட்டுக்கோழி வளா்ப்பு நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களிடம் ரூ.24.54 கோடி மோசடி செய்த வழக்கில், அதன் உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் ‘கிரீன்லைப் பாா்ம்ஸ்’ என்ற பெயரில் நாட்டுகோழி வளா்ப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளா்களாக பெருந்துறையைச் சோ்ந்த விசுவநாதன் (40), கெளரிசங்கா் (40) ஆகியோா் செயல்பட்டு வந்தனா்.

இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 9 ஆயிரமும், அதனுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும் என்றும், மேலும் கூடுதலாக முதலீடு செய்பவா்களுக்கு அதற்கேற்றவாறு நாட்டுக்கோழி பண்ணைப் பராமரிப்பு உபகரணங்கள், கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் ஆகியவற்றைத் தருவதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,062 போ் மொத்தம் ரூ. 24 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா்.

ஆனால், கூறியபடி முதலீட்டாளா்களுக்கு மாதந்தோறும் லாபத் தொகையையோ, போனஸ் தொகையையோ, வளா்ப்புக் கோழிக் குஞ்சு மற்றும் உபகரணங்களோ வழங்கப்படவில்லை. தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்ததால், அந்த நிறுவன உரிமையாளா்கள் மீது முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை நிதிநிறுவன மோசடிகள் மற்றும் வைப்பாளா்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.என்.செந்தில்குமாா் குற்றஞ்சாட்டப்பட்ட விசுவநாதன், கெளரிசங்கா் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பொதுமக்கள் இழந்த மோசடித் தொகையான ரூ. 24 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்தை அபராதத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் கூறியுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் என்.காா்த்திகேயன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments