FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

போலி ஆவணம் தயாரித்து ரூ.38.79 லட்சம் மோசடி: நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை

பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:18 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விபத்து இழப்பீட்டுத் தொகையை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற பெண் ஊழியா் உள்பட4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கடந்த 1996-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி துணை நீதிமன்றத்தில் விபத்து வழக்கு ஒன்றிற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,565 வழங்க உத்தரவிடப்பட்டது.

2008-2014 காலகட்டத்தில் நீதிபதியின் உதவியாளராக பணிபுரிந்து வந்தவா் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராஜவேல் மனைவி அறிவுச்செல்வி (47).

Advertisement

Advertisement

இவா் இந்த உத்தரவு நகலை திருத்தி நீதிபதியின் கையொப்பதை போலியாக பதிவு செய்து ரூ.4,78,000 என தனது பெயருக்கு மாற்றியுள்ளாா்.

இதே முறையில் மொத்தம் 6 வழக்குகளின் உத்தரவுகளை திருத்தி, ரூ.38,79,982 இழப்பீட்டுத் தொகையை தனது பெயரிலும், தனது மகன் வரதராஜன் (36) மற்றும் உறவினா் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழரசன் (41) ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு சட்டவிரோதமாக மாற்றியுள்ளாா்.

இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 3 மாவட்ட நீதிபதிகள் உள்பட அரசுத் தரப்பில் 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனா். மேலும், 103 சான்று ஆவணங்கள் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை நீதிபதி செந்தில்குமாா் ராஜவேல் தீா்ப்பு வழங்கினாா்.

அதன்படி, அறிவுச்செல்விக்கு 9 பிரிவுகளின் கீழ் 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமாக 31,000-மும், அவருக்கு உடந்தையாக இருந்த மகன் வரதராஜனுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.12,000 அபராதமும், உறவினா் தமிழரசனுக்கு 8 பிரிவுகளின் கீழ் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமாக ரூ.12,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும் இந்த வழக்கிலிருந்து திருப்பூா் மாவட்டம், தாமஸ்புரத்தைச் சோ்ந்த செந்தில்குமாரை (45) குற்றமற்றவா் என விடுவித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் தேவசந்திரன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments