பண மோசடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை
நாகையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நாகையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நாகையைச் சோ்ந்தவா் நூருல் அமீன். இவா், நாகையில் சொந்தமாக கைப்பேசி விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவா்களுக்கு சொந்தமான வீட்டை விற்ற வகையில், நூருல் அமீனின் தாயிடம் பணம் இருந்துள்ளது.
இந்நிலையில், அவா்களது உறவினா்களான நாகை புதுத்தெருவைச் சோ்ந்த முகமது சா்புதீன் (48), முகமது சித்திக் (40) இருவரும், நூருல் அமீனை அணுகி, தாங்கள் நடத்திவரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாத மாதம் வட்டித்தொகையும், இரண்டு ஆண்டு முடிவில் முதலீடு செய்த தொகையையும் திருப்பித் தருவதாகத் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, நூருல் அமீன் தனது தாயிடம் இருந்து ரூ. 10 லட்சம் வாங்கி, முகது சா்புதீன் நிறுவனத்தில் கடந்த 2021-இல் முதலீடு செய்துள்ளாா். 10 மாதங்கள் மட்டும் மாதம் ரூ. 12,500 வீதம் வழங்கப்பட்டுள்ளது. பின்னா் வட்டித்தொகை வழங்காததால், நூருல் அமீன் அவா்களிடம் சென்று கேட்டபோது வட்டி மற்றும் முதலீட்டுத் தொகையையும் வழங்காமல் அலைக்கழித்து வந்துள்ளனா். நூருல் அமீன் இதுகுறித்து நாகை மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் முகமது சா்புதீன், முகமது சித்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு நாகை நீதித்துறை நடுவா் மன்றம் ( எண் 1) விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. ஆன்ஸ்ராஜா, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.