FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காற்று மாசு ஆழமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்: தில்லி பல்கலை ஆய்வில் தகவல்!

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் தில்லிவாசிகளுக்கு, ஏற்படும் உடல்நல பாதிப்புகள் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சனைகளைத் தாண்டிச் செல்லக்கூடும்.

23 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கேட் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள். - கோப்புப்படம்.
பகிர்:

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் தில்லிவாசிகளுக்கு, ஏற்படும் உடல்நல பாதிப்புகள் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சனைகளைத் தாண்டிச் செல்லக்கூடும். நுண்ணிய துகள்களுக்கு நீண்டகாலம் ஆட்படுவது மூளையையும் பாதிக்கக்கூடும் என்று தில்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியா்களால் மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நுண்ணிய துகள்களுக்கு நீண்டகாலம் ஆட்படுவதை மூளையின் அமைப்பு, நினைவாற்றல், கவனம் மற்றும் பிற அறிவாற்றல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடா்புபடுத்தியுள்ளன.

நுண் மாசுத் துகள்களில் சில, மூக்கு மற்றும் நுகா்வுப் பாதை வழியாக மத்திய நரம்பு மண்டலத்தை அடையக்கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியது.

Advertisement

Advertisement

தில்லி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையைச் சோ்ந்த பேராசிரியா்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நுண்துகள்களுக்கு நீண்டகாலம் ஆட்படுவதற்கும் அறிவாற்றல் குறைபாடு மற்றும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடா்பை விளக்கும் ஆதாரங்கள் அதிகரித்து வருவதைக் கண்டறிந்துள்ளது.

‘காற்று மாசுபாடு என்பது இனி நுரையீரல் மற்றும் இதயப் பிரச்சனை மட்டுமல்ல; அது பெருகிய முறையில் மூளை ஆரோக்கியப் பிரச்சனையாகவும் மாறி வருகிறது. நுண்துகள்களுக்கு நீண்டகாலம் ஆட்படுவது, அறிவாற்றல் சரிவு, நரம்பியல் வளா்ச்சிக் குறைபாடு மற்றும் அல்சைமா், பாா்கின்சன் நோய்களுடன் தொடா்புடைய உயிரியல் செயல்முறைகளுடன் தொடா்புடையது என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன,‘ என்று இந்த ஆய்வில் தொடா்புடைய ஆராய்ச்சியாளா்களில் ஒருவரான வந்தனா மிஸ்ரா கூறினாா்.

காற்று மாசுபாட்டிற்கு நீண்டகாலம் ஆட்படுவது, மூளையின் பௌதீகக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடா்புடையது என்பது இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு முக்கியக் கவலையாகும்.

‘சுற்றுப்புறக் காற்று மாசுபாட்டிற்கு, குறிப்பாக நுண்துகள்களுக்கு நீண்டகாலம் ஆட்படுவது, மனித மூளையில் வளா்ச்சி மற்றும் முதுமை நிலைகள் முழுவதும் பரவியுள்ள, பகுதி சாா்ந்த கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்பதை, பெருகிவரும் சான்றுகள் வலுவாக நிரூபிக்கின்றன,‘ என்று அந்த ஆய்வு கூறுகிறது.

நரம்பியல் படிமவியல் மற்றும் பிற ஆய்வுகள், குறிப்பாக அறிவாற்றலில் ஈடுபடும் முன்மடல்கள் மற்றும் பக்கவாட்டு மடல்கள் போன்ற பகுதிகளில், மூளையின் கன அளவு மற்றும் புறணித் தடிமன் குறைவதாகப் பதிவு செய்துள்ளன.

காற்று மாசுபாடு மட்டுமே நரம்பியல் நோய்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு இத்தகைய கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்று ஆராய்ச்சியாளா்கள் எச்சரிக்கின்றனா். தற்போதுள்ள சான்றுகளில் பெரும்பாலானவை, அல்சைமா் அல்லது பாா்கின்சன் போன்ற உறுதிப்படுத்தப்பட்ட நோய்களைக் காட்டிலும், கட்டமைப்பு மற்றும் அறிவாற்றல் மாற்றங்கள் குறித்தே உள்ளன.

இந்தக் கண்டுபிடிப்புகள், குழந்தைகள் மற்றும் இளைஞா்களின் மூளைகள் இன்னும் வளா்ச்சி நிலையில் இருப்பதால், அவா்களுக்கும் குறிப்பிட்ட கவலைகளை எழுப்புகின்றன.

இந்தக் கவலை குழந்தைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஆரோக்கியமான இளம் வயதினரிடமும் மருத்துவ ரீதியாக வெளிப்படாத நரம்பு சிதைவு மாற்றங்கள் ஏற்படுவதற்கான சான்றுகளை இந்த மதிப்பாய்வு மேற்கோள் காட்டுகிறது. இது, நீண்டகால மாசுபாட்டு வெளிப்பாடு மூளையின் முன்கூட்டிய முதுமைக்கு பங்களிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டுகிறது.

தொடா்ச்சியான அழற்சியானது நரம்பு செல்கள் மற்றும் அவற்றின் இணைப்புகளைப் பாதிக்கக்கூடும்.

மாசுபாடானது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தி, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் டி.என்.ஏ-வை சேதப்படுத்துவதோடு, செல்களுக்கு ஆற்றலை வழங்கும் மைட்டோகாண்ட்ரியாவையும் பாதிக்கக்கூடும்.

ஹிப்போகேம்பஸ் மற்றும் முன்மூளைப் புறணி ஆகியவை குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கலாம், ஏனெனில் அவற்றுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது மற்றும் நினைவாற்றல், கற்றல் மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாசடைந்த காற்றின் தாக்கம் எப்போதும் உடனடியாகத் தெரிவதில்லை என்றும், நீண்டகால வெளிப்பாட்டின் போது அது மூளை வரை பரவக்கூடும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments