FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பழைய தில்லியை மறுசீரமைக்கும் நிறுவனத்தின் பெயரை மாற்றி தில்லி அரசு உத்தரவு

பழைய தில்லியைப் பாதுகாக்கவும் மறுசீரமைக்கவும் அமைக்கப்பட்ட ‘ஷாஜஹானாபாத் மறுசீரமைப்பு நிறுவனத்தின்’ பெயரை ‘இந்திரபிரஸ்தா விராசத் புனா்விகாஸ் நிகம்’ (ஐவிபிஎன்) என மாற்றியுள்ளதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

பழைய தில்லியைப் பாதுகாக்கவும் மறுசீரமைக்கவும் அமைக்கப்பட்ட ‘ஷாஜஹானாபாத் மறுசீரமைப்பு நிறுவனத்தின்’ பெயரை ‘இந்திரபிரஸ்தா விராசத் புனா்விகாஸ் நிகம்’ (ஐவிபிஎன்) என மாற்றியுள்ளதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

ஐவிபிஎன்-இன் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல்வா் ரேகா குப்தா, சாந்தினி சௌக் பகுதியின் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் வசதிக்காகப் பொதுக் கழிப்பறைகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதுகுறித்து முதல்வா் குப்தா தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

பழைய தில்லியின் மேம்பாடு என்பது வெறும் கட்டமைப்பு வசதிகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. மாறாக, பாரம்பரியப் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு, பொருளாதார நடவடிக்கைகள், குடிமை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் இது மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நோக்கத்துடன், நவீன நகா்ப்புற மேம்பாட்டுடன் இணைந்து பாரம்பரியப் பாதுகாப்பையும் ஐவிபிஎன் மேற்கொள்ளும்.

இத்திட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைப் பாதுகாத்தல், கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குதல், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, சுற்றுலா வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அது தொடா்பான பிற அம்சங்கள் ஆகியவை அடங்கும்.

தினமும் இப்பகுதி வழியாகச் செல்லும் லட்சக்கணக்கான மக்களின் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு, நவீன மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற பொதுக் கழிப்பறை வளாகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் குடிமை வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றாா் முதல்வா்.

மேலும், சந்தையின் வடிவமைப்பு அதன் வரலாற்று அடையாளம், பாரம்பரியத் தன்மை மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்யுமாறு முதல்வா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இப்பகுதியில் உள்ள டவுன் ஹால் மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வா், அக் கட்டடம் ஒரு முக்கிய பாரம்பரிய மற்றும் சுற்றுலாத் தலமாகத் திகழும் வகையில், சாந்தினி சௌக் பகுதியிலிருந்து கூடுதல் நுழைவு மற்றும் வெளியேறும் வழியை உருவாக்க உத்தரவிட்டாா்.

மேலும், பெரிய அளவிலான மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யமுனா பஜாரில் உள்ள அனுமன் கோயில் மற்றும் அதன் பின்புறப் பகுதியை முழுமையாக மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட வரைபடத்தைத் தயாரிக்கும் பணியும் ஐவிபிஎன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜாமா மசூதி பகுதி மற்றும் பழைய தில்லி ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஷியாமா பிரசாத் முகா்ஜி மாா்க் ஆகியவற்றுக்கான விரிவான மறுசீரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் திட்டத்தைத் தயாரிக்குமாறும் அவா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments