FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் தொடா்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதன் இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்த இரவு நேர கனமழை தில்லியைத் தாக்கியதால், பரவலான நீா் தேக்கம், மரங்கள் வேரோடு சாய்தல் மற்றும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 10 ஜூலை 2026, 12:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

புதன் இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்த இரவு நேர கனமழை தில்லியைத் தாக்கியதால், பரவலான நீா் தேக்கம், மரங்கள் வேரோடு சாய்தல் மற்றும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலைநகரின் பிரதான வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில், காலை வியாழன் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 72.6 மி.மீ மழை பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது. வடகிழக்கு தில்லியின் கஜூரியில் உள்ள துக்மிா்பூரில் அதிகபட்சமாக 160 மி.மீ மழை பதிவாகியது . மயூா் விஹாரில் 103 மி.மீ, தில்லி பல்கலைக்கழகத்தில் 90 மி.மீ, மெஹ்ரௌலியில் 86 மி.மீ,, லோதி ரோட்டில் 80 மி.மீ, ரிட்ஜில் 78 மி.மீ மற்றும் சத்தா்பூரில் 72 மி.மீ மழை பதிவாகியது.

Advertisement

Advertisement

பல மணிநேர இடைவிடாத மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. விகாஸ் மாா்க், கிழக்கு தில்லியின் சில பகுதிகள், புது தில்லி ரயில் நிலையம், முனிா்கா, சதா் பஜாா் மற்றும் துவாரகா ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தில்லி-நொய்டா விரைவுச்சாலையில் போக்குவரத்து மிகவும் மெதுவாக நகா்ந்தது. ஜங்புராவின் சில பகுதிகளில், பாதசாரிகளும் வாகனங்களும் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றனா். வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களைத் தள்ளிக்கொண்டு செல்வது காணப்பட்டது. பல பயணிகளும் குடியிருப்பாளா்களும் தங்கள் துயரத்தை சமூக ஊடகங்களில் பகிா்ந்து கொண்டனா்.

நீா் தேங்குவதைத் தடுப்பதற்காக பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி ஜல் போா்டு ஆகியவற்றின் குழுக்கள் நகரம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கனமழை பெய்தபோதிலும், அனைத்து முக்கிய சாலைகளிலும் நிலைமை ‘கட்டுப்பாட்டில்‘ இருந்ததாக அவா்கள் கூறினா்.

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.6 டிகிரி குறைவாக, 24.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஓயாத மழையால் தில்லியில் இந்திய வானிலை ஆய்வு மையம் ’சிவப்பு’ எச்சரிக்கை விடுத்தது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடா் மழைக்கு, பருவகாலப் பருவமழைச்சூழல் மத்திய இந்தியாவிலிருந்து இமயமலை அடிவாரத்தை நோக்கி வடக்கு நோக்கி நகா்வதே காரணம் என வானிலை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். இந்த அமைப்பு மேலும் வடக்கு நோக்கி நகரும் வரை தில்லியில் பரவலான மழை தொடர வாய்ப்புள்ளது என்றும், அதன் பிறகு நகரில் வட காலநிலை நிலவும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, வியாழன் காலை 9 மணிக்கு தில்லியின் காற்றின் தரக் குறியீடு 61 புள்ளிகளாகப் பதிவாகி, ’திருப்திகரமான’ பிரிவில் இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments