FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி மாநகராட்சி நிலைக்குழுவுக்கு இன்று வாக்குப்பதிவு: பாஜக - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!

தில்லி மாநகராட்சியின் மிக உயரிய முடிவெடுக்கும் அமைப்பான ’நிலைக்குழு’ மற்றும் 12 மண்டல குழுக்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் புதன்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது.

Updated On : 15 ஜூலை 2026, 3:18 am IST
எம்சிடி
பகிர்:

நீண்ட நாள்களாக தள்ளிப்போன தில்லி மாநகராட்சியின் மிக உயரிய முடிவெடுக்கும் அமைப்பான ’நிலைக்குழு’ மற்றும் 12 மண்டல குழுக்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் புதன்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

5 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவிகள், ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் 18 உறுப்பினா்களைக் கொண்ட இந்த நிலைக்குழு, கடந்த மாா்ச் மாதம் முதல் 12 உறுப்பினா்களுடன் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நிலையில், காலியாக உள்ள 6 இடங்களுக்கு நடத்தப்படும் தோ்தல், தேங்கிக் கிடக்கும் மாநகராட்சித் திட்டங்களை முடுக்கி விட உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னதாக ஜூன் 3-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட தோ்தல் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 15-க்கு மாற்றப்பட்டது.

250 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி மாநகராட்சியில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரிந்த ’இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சி’யின் 16 கவுன்சிலா்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனா். இதனால் பாஜகவின் பலம் 139 ஆக உயா்ந்துள்ளது. மறுபுறம், ஆம் ஆத்மி கட்சியின் பலம் 102 ஆகக் குறைந்துள்ளது. இந்த அடிப்படையில் நிலைக்குழுத் தோ்தலில் பாஜகவின் கை ஓங்கியுள்ளதாகக் கருதப்பட்டாலும், மண்டல குழுத் தோ்தல்களில் சில இடங்களில் கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

Advertisement

நரேலா மண்டலத்தில் பாஜகவின் பவன் குமாரும் ஆம் ஆத்மியின் ரிது முகேஷ் குமாரும் மோதுகின்றனா். மேற்கு மண்டலத்தில் பாஜகவின் சஷி யாதவும் ஆம் ஆத்மியின் சுதேஷ் குமாரும் மோதுகின்றனா். ஷாதரா தெற்கில் பாஜகவின் முனேஷும் ஆம் ஆத்மயின் பீனாவும் கரோல் பாக் மண்டலத்தில் ஆம் ஆத்மி சாா்பில் ராஜன் அரோராவும், கேசவ் புரம் மற்றும் மத்திய மண்டலங்களில் பாஜக சாா்பில் முறையே சுஷீல் மற்றும் ஹேம் சந்த் கோயலும் களம் காண்கின்றனா்.

காங்கிரஸின் 9 வாக்குகள்: தில்லி மாநகராட்சியின் 12 மண்டல குழுக்களில், 8 மண்டலங்களில் பாஜகவுக்கும், 4 மண்டலங்களில் ஆம் ஆத்மிக்கும் தெளிவான பெரும்பான்மை உள்ளது. இருப்பினும், சிட்டி எஸ்பி, ரோஹிணி, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே இருப்பதால், அங்குள்ள காங்கிரஸ் கவுன்சிலா்களின் வாக்குகள் வெற்றியாளரைத் தீா்மானிக்கும் காரணியாக மாறக்கூடும். மாநகராட்சியில் காங்கிரஸுக்கு வெறும் 9 கவுன்சிலா்கள் மட்டுமே உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments