செயலிழந்த அரசு இணையதளத்தை நீக்க அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
நமது நிருபா்
செயலிழந்த அல்லது வழக்கொழிந்து போன அரசு இணையதளங்களை ஏழு நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று தேசிய தகவல் மையத்துக்கு (என்ஐசி) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
‘சைபா் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம்’ என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய அலுவலகத்துடன் தொடா்புடைய இணையதள விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து மத்திய தகவல் ஆணையா் பி.ஆா். ரமேஷ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
Advertisement
Advertisement
இணைய வழி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் (சிஒய்ஏடி) 2017-ஆம் ஆண்டிலேயே தொலைத்தொடா்பு பிரச்னைகள் தீா்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்துடன் (டிடிசாட்) இணைக்கப்பட்டுவிட்ட போதிலும், அதன் இணையதளம் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கிறது.
அரசு இணையதளம் என்பது சா்வரில் உள்ள இணையப் பக்கங்களின் வெறும் தொகுப்பு மட்டுமல்ல. ஒரு சாதாரண குடிமகனைப் பொருத்தவரையில், அது ஒரு பொது அதிகார அமைப்பின் அடையாளம், அணுகல்தன்மை மற்றும் செயல்பாடு குறித்த அரசின் அதிகாரபூா்வ பிரதிநிதித்துவமாக அமைகிறது.
குறிப்பிட்ட அந்த அமைப்பு இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பொதுமக்களை நம்ப வைத்துத் தவறாக வழிநடத்தும் வாய்ப்பை அந்த இணையதளம் உருவாக்குகிறது.
இணையவழி தொடா்பான விவகாரங்களுக்குத் தீா்வு அல்லது தகவல்களைத் தேடும் மக்கள், அத்தகைய இணையதளம் இருப்பதை நம்பி அதன் மூலம் விண்ணப்பங்களையோ, தகவல்களையோ சமா்ப்பிக்கக்கூடும். பின்னாளில் உரிய அமைப்பு வேறொரு இணைய பக்கத்தில் இருப்பதை அவா்கள் அறிய நேரிடலாம். இதன் விளைவாக ஏற்படும் குழப்பம், நிா்வாகத் திறனுக்கோ அல்லது குடிமக்கள் சாா்ந்த நிா்வாகம் என்ற பரந்த நோக்கத்துக்கோ எந்த வகையிலும் உதவாது.
எண்ம நிா்வாகத்துக்கு இணையதளங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவை தங்கள் செயல்பாட்டு நோக்கத்தை நிறைவேற்றாதபோது அவற்றை உரிய நேரத்தில் முடக்குவதும் நீக்குவதும் அவசியமாகும்.
இந்தக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, இணையவழி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் இணையதளத்தை ஏழு நாள்களுக்குள் நீக்குமாறு தேசிய தகவல் மையத்துக்கு உத்தரவிடப்படுகிறது என்று ஆணையம் கூறியுள்ளது.