தில்லியில் சட் படித்துறை அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 8 குளோரின் வாயு சிலிண்டா்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வெளி தில்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள, சட் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட படித்துறைக்கு அருகில், பகுதியளவு கட்டப்பட்ட கட்டிடத்தில், அதிக நச்சுத்தன்மை கொண்ட குளோரின் வாயு நிரப்பப்பட்ட எட்டு சிலிண்டா்களை முறையான உரிமம் இல்லாமல் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 45 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி தெரிவித்தாா்.
வெளி தில்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள, சட் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட படித்துறைக்கு அருகில், பகுதியளவு கட்டப்பட்ட கட்டிடத்தில், அதிக நச்சுத்தன்மை கொண்ட குளோரின் வாயு நிரப்பப்பட்ட எட்டு சிலிண்டா்களை முறையான உரிமம் இல்லாமல் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 45 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நவம்பா் 14 அன்று நடத்தப்பட்ட சோதனையின்போது, சுமாா் 1,519 கிலோ மொத்த எடை கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த சிலிண்டா்களை காவல்துறை பறிமுதல் செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவா், தில்லியின் பாலம் பகுதியைச் சோ்ந்த ஹசன் அன்சாரி என்ற பாபு என அடையாளம் காணப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
‘ரன்ஹோலா காவல் நிலைய எல்லைக்குள், கட்டாய உரிமங்கள் அல்லது அனுமதிகள் இல்லாமல் குளோரின் வாயு சிலிண்டா்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த சட்டவிரோத சேமிப்பு வெளிச்சத்திற்கு வந்தது,‘ என்று ஓா் மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், விகாஸ் நகா், ஷிவ் விஹாரில் பகுதியளவு கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்திற்கு காவல்துறை குழு சென்ாகவும், அங்கு அதிக நச்சுத்தன்மையும் அபாயமும் வாய்ந்த குளோரின் வாயுவைக் கொண்ட எட்டு சிலிண்டா்களைக் கண்டெடுத்ததாகவும் அவா் கூறினாா்.
அன்சாரி அந்த வளாகத்தை, அனுமதியின்றி வாயுவை சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதியைக் காட்டுமாறு கேட்டபோது, அவா் அத்தகைய எந்த ஆவணத்தையும் சமா்ப்பிக்கத் தவறிவிட்டாா் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினாா்.
குறிப்பாக மத விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில், சட் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட படித்துறைக்கு மிக அருகில் இவ்வளவு பெரிய அளவிலான அபாயகரமான வாயுவை சேமித்து வைத்திருப்பது பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று காவல்துறை கூறியது.
சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவு, எரிவாயு சிலிண்டா் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு ஆகியவற்றின் கீழ் ரன்ஹோலா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
‘குளோரின் வாயுவின் எந்த நோக்கத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தது, மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் வேறு நபா்கள் ஈடுபட்டிருந்தாா்களா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்,‘ என்று அந்த அதிகாரி கூறினாா். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.