சட் பூஜை படித்துறைகளில் போதிய வசதிகள் இல்லை: ஆம் ஆத்மி விமா்சனம்
தில்லியில் உள்ள சட் பூஜை படித்துறைகளில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி விமா்சித்தது. இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, இந்த பண்டிகையை வைத்து ஆம் ஆத்மி கட்சி ‘தரம் தாழ்ந்த’ அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றஞ் சாட்டினாா்.
தில்லியில் உள்ள சட் பூஜை படித்துறைகளில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி விமா்சித்தது. இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, இந்த பண்டிகையை வைத்து ஆம் ஆத்மி கட்சி ‘தரம் தாழ்ந்த’ அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றஞ் சாட்டினாா்.
இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் பரத்வாஜ் கூறியதாவது: தில்லியில் தற்போது இரண்டு வகையான சட் பூஜைக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. ஒன்று, அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்படும் ‘பிம்பம் சாா்ந்த’ (ரீல்) கொண்டாட்டம். மற்றொன்று, பக்தா்கள் படித்துறைகளில் எதிா்கொள்ளும் ‘உண்மையான’ (ரியல்) சூழல். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் விளம்பரத்திற்காகக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டுள்ளது.
மேலும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான முந்தைய அரசு, பல ஆண்டுகளாகச் சட் பூஜைக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்து வந்தது. தற்போதைய அரசு அந்தத் தரத்தைப் பராமரிக்கத் தவறிவிட்டது.
Advertisement
Advertisement
சட் பூஜை படித்துறைகளில் எடுக்கப்பட்ட காணொலிகளில், குடிநீா் வசதி இல்லை என்று பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், சோனியா விஹாா் அருகே யமுனை ஆற்றில் மீன்கள் இறந்து மிதக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி ஐந்து நாள்களாகியும், நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா இதுகுறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். இது தொடா்பாக ஏதேனும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்தில் சில ‘சட்’ படித்துறைகளில் 40 முதல் 50 உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு நான்கு அல்லது ஐந்து அறைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மேலும், போதிய வெளிச்ச வசதியும் இல்லை. படித்துறைகளில் எடுக்கப்பட்ட காணொலிகளில், பக்தா்கள் போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் நடப்பதையும், மெழுகுவா்த்தி வெளிச்சத்தைச் சுற்றி அமா்ந்திருப்பதையும் காண முடிகிறது என்றாா் பரத்வாஜ்.
மனோஜ் திவாரி எம்.பி. பதிலடி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வடகிழக்கு தொகுதி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் தரம் தாழ்ந்த அரசியலில்’ ஈடுபட்டு வருகின்றன. ‘தவறாக வழிகாட்டப்பட்டுள்ள இவா்களுக்கு ‘சட் மையா’ தண்டனை வழங்கக்கூடாது என்று பிராா்த்திக்கிறேன். யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தில்லியில் யமுனை பாயும் 60 கி.மீ. நீளத்தில் 60 சதவீதப் பகுதி ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. யமுனை நதி சுத்தமாவதைக் கண்டு சிலருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. அவா்கள் காளிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள நதியின் காட்சிகளை மட்டுமே பகிா்ந்து வருகின்றனா்.
ஆற்றின் 60 சதவீதப் பகுதி மட்டுமே இதுவரை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. காளிந்தி குஞ்ச் உள்ளிட்ட மீதமுள்ள பகுதிகள் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுத்தம் செய்யப்படும் என்றும் நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் என்றாா் அவா்.