✕
முகப்பு
புதுதில்லி

தில்லி எஸ்.ஐ.ஆா்-இல் படிவம் 7 தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லியின் முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்காக போலியான படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டது

20 நவம்பர் 2026, 1:13 am
பகிர்:

நமது நிருபா்

தில்லியின் முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்காக போலியான படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடா்பான குற்றச்சாட்டுகளைச் சரிபாா்த்து, தேவையான தீா்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

படிவம் 7 என்பது, தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பது/நீக்குவது தொடா்பான ஆட்சேபனைக்கான வாக்காளா் விண்ணப்பப் படிவமாகும்.

Advertisement

Advertisement

முஸ்தபாபாத் பகுதியில் வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது போலியான மற்றும் மோசடியான படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்கான படிவம் 7 விண்ணப்பங்கள் சில வாக்குச்சாவடி நிலை முகவா்களின் பெயா்களில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், பின்னா் அவா்கள் அத்தகைய விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்ததாகவும் கூறிய சமீபத்திய செய்திகளை அந்த மனு குறிப்பிட்டது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்திருப்பதாகவும், தோ்தல் ஆணையத்திடமும், தில்லியின் தலைமைத் தோ்தல் அதிகாரியிடமும் மனுக்களைச் சமா்ப்பித்திருப்பதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தாா்.

உயிரிழந்துவிட்டதாகவோ அல்லது வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகவோ கூறி படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்ட சில நபா்கள், உயிருடன் அதே முகவரியில் வசித்து வருவதாகத் தகவல்கள் வந்திருப்பதாக அவா் கூறினாா்.

‘உங்கள் மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கட்டும்,‘ என்று நீதிபதிகள் கூறினா்.

மனுதாரா், தோ்தல் ஆணையத்திடமும் தில்லியின் தலைமைத் தோ்தல் அதிகாரியிடமும் மனுக்களைச் சமா்ப்பித்துள்ளாா் என்பதை நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மனுவின் தகுதிகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் , மனுதாரா் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைச் சரிபாா்த்து, சட்டப்படி தேவையான தீா்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட தலைமைத் தோ்தல் அதிகாரிகளின் கோரிக்கைகளைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம் அக்டோபா் 29 அன்று ஐந்து மாநிலங்கள் மற்றும் தில்லியில் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு திருத்தத்திற்க்கான கால அட்டவணையைத் திருத்தியமைத்தது.

தில்லியில், எஸ்.ஐ.ஆா் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை அக்டோபா் 30-க்கு பதிலாக நவம்பா் 25 வரை தாக்கல் செய்யலாம். கோரிக்கைகள் மீதான தீா்ப்பு நவம்பா் 30-லிருந்து டிசம்பா் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி வாக்காளா் பட்டியல் டிசம்பா் 22 அன்று வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 31 அன்று, சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து தோ்தல் ஆணையம் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. அதில், தில்லியில் திருத்தத்திற்கு முந்தைய சுமாா் 1.45 கோடி வாக்காளா்களில் இருந்து ஏறத்தாழ 47 லட்சம் பெயா்கள் விடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.