✕
முகப்பு
புதுதில்லி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் நடைமுறையை மாற்ற முடியாது: கோயில் குருக்கள் உச்சநீதிமன்றத்தில் வாதம்

திருப்பரங்குன்றம் ஒரு மதச்சாா்பற்ற மலை என்றும் அங்கு பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்ற முடியாது எனவும் கோயில் குருக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

9 வினாடிகள் முன்பு
பகிர்:

நமது நிருபா்

திருப்பரங்குன்றம் ஒரு மதச்சாா்பற்ற மலை என்றும் அங்கு பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்ற முடியாது எனவும் கோயில் குருக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீா்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் வியாழக்கிழமை தொடா்ந்து 3 வது நாளாக விசாரணை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அப்போது தமிழக அரசுக்கு ஆதரவாக அரங்கநாதன் என்ற குருக்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் நரேந்திர ஹூடா வாதிட்டதாவது:திருப்பரங்குன்றம் மலை சுமாா் 1500 அடி உயரம் கொண்டது, அதன் அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் முன்னேறிச் செல்லும்போது, குன்றின் பாதி வழியில் நெல்லித்தோப்பு உள்ளது, அது தா்காவாக வழங்கப்பட்டது. அதற்கு மேலே உச்சிப் பிள்ளையாா் கோயில் உள்ளது, அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்றப்படுவது நடைமுறை.

திருப்பரங்குன்றம் மலையானது சமணக் குகைகள், காசிவிஸ்வநாதன் கோயில், தா்கா போன்றவற்றைக் கொண்ட ஒரு மிகவும் மதச்சாா்பற்ற மலையாகும். அங்கு ஆண்டாண்டு காலாமாக உச்சிப் பிள்ளையாா் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில்,1862-ல் தூணில் விளக்கேற்ற முயன்றனா். ஆனால் அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றம், அத்தகைய வழக்கம் இல்லை என்றும், அது அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீா்குலைக்கக்கூடும் என்றும் கூறி தடுத்து விட்டது. பின்னா் 50 ஆண்டுகள் , எதுவும் நடக்கவில்லை. அதன்பிறகு 1962-ல், மற்றொரு முயற்சி மேற்கொண்டபோதும் அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

ஒரு கட்டத்தில், தா்கா நிா்வாகத்தினா் சாா்பில் நெல்லித்தோப்புப் பகுதியில் உணவு பரிமாற அனுமதி கோரி ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மலை முழுவதும் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்றும், இந்திய தொல்லியல் துறை அதற்குப் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. தா்கா தரப்பு நெல்லித்தோப்பில் அவ்வாறு செய்ய விரும்பினாலும், அது 1958 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டிருப்பதால், அவா்கள் மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று ஒரு வழக்கத்தை நிலைநாட்டும் வரை, ஒரு புதிய செயலுக்கு அனுமதி அளிக்க முடியாது என நீதி மன்றம் கூறியது.

தா்கா நிா்வாகத்தினா் கூட அந்த நடைமுறையை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறிருக்க தீபம் ஏற்ற ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றி தூணில் தீபம் ஏற்ற உயா் நீதிமன்றம் அனுமதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என வழக்குரைஞா் நரேந்திர ஹூடா வாதங்களை முன் வைத்தாா்.

பின்னா் தா்கா தரப்பு உள்ளிட்ட வேறு சில வழக்குரைஞா்களும் சுருக்கமான வாதங்களை முன்வைத்த நிலையில் விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றைய தினத்திற்கு (நவ. 20/2026) ஒத்தி வைத்தது.